- செபோய் புரட்சி
- வேலூர்
- கலெக்டர்
- சுப்புலட்சுமி
- சமாஜ்வாடி
- மணிவண்ணன்
- கார்த்திகேயன்
- அமுலுவிஜயன்
- நினைவு
- வேலூர் சிப்பாய் புரட்சி
- சிப்பாய் புரட்சி 218வது நினைவேந்தல் கலெக்டர்
- தின மலர்
வேலூர், ஜூலை 11: வேலூர் சிப்பாய் புரட்சியின் 218வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ேவலூரில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூணில் நேற்று காலை கலெக்டர் சுப்புலட்சுமி, எஸ்பி மணிவண்ணன், எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், அமுலுவிஜயன் மற்றும் அரசு அலுவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்திய விடுதலைக்கான விதைகள் தென்தமிழகத்தில் முதன்முதல் பாளையக்காரர்கள் மற்றும் மைசூரின் திப்புசுல்தானால் தூவப்பட்டது. இதன் உச்சமாக ஆங்கிலேயரின் சிந்தனையில் அச்சத்தை தோற்றுவித்த சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் எழுந்தது. 1806 ஜூலை 10ம் நாள் அதிகாலை கோட்டைக்குள் பிரிட்டிஷ் இந்திய படைக்குள் இருந்த இந்திய சிப்பாய்களின் துப்பாக்கிகளில் இருந்து கிளம்பிய தோட்டாக்கள் பிரிட்டிஷ் தளகர்த்தர்களை அலறவிட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படையின் தளபதி பான்கோட் உட்பட 100 பிரிட்டிஷ் படையினரை இந்திய சிப்பாய்களின் துப்பாக்கிகள் பதம் பார்த்த நிலையில், ஆற்காட்டில் இருந்து விரைந்து வந்த கர்னல் கில்லஸ்பி தனது பீரங்கிகளின் மூலம் இந்திய வீரர்களின் எழுச்சியை நசுக்கினான். நூற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் கோட்டைக்குள் ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை சுதந்திரத்தின் விதைகளாக்கினர்.
இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடந்து 218ம் ஆண்டு நினைவு தினம் வேலூரில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக வேலூர் மக்கான் சிக்னலில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் நிறுவப்பட்ட சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை நினைவுத்தூணில் கலெக்டர் சுப்புலட்சுமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து எஸ்பி மணிவண்ணன், எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், அமுலுவிஜயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு, ஆர்டிஓ கவிதா, முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் சீனிவாசன் உட்பட அரசு அலுவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இவர்களை தொடர்ந்து என்சிசி மாணவர்கள், முன்னாள் படைவீரர்கள், பொதுமக்கள் மலர்கள் தூவி சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
காலை 11 மணியளவில் காட்பாடி தாலுகா கனகசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சாலையோர கூழ் வியாபாரி ஜெய்சங்கர், வேலூர் சிப்பாய் புரட்சியின்போது வீரமரணமடைந்த 350க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 350 எலுமிச்சை பழங்களை தனது உடலில் குத்தியபடியும், கையில் தேசிய கொடியை ஏந்தியபடியும் தனது பேத்தி யுவயுடன் காலை 11 மணியளவில் ஆட்டோவில் மக்கான் சந்திப்பில் வந்து இறங்கினார். வேலூர் சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் சென்ற அவர் மலர்கள் தூவியும், கற்பூரம் ஏற்றியும் புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், சாரண மாணவ, மாணவிகள் சீருடையுடன் ஊர்வலமாக வந்தனர். மக்கான் சந்திப்பு வந்த அவர்கள் சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் முன்பு மலர்கள் தூவி புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். இவர்களில் சில மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த மெழுகு வர்த்திகளை ஏற்றினர்.
The post சிப்பாய் புரட்சி 218ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு கலெக்டர், எஸ்பி, எம்எல்ஏக்கள் மரியாதை வேலூரில் நினைவு சின்னம் வண்ண மலர்களால் அலங்கரித்து appeared first on Dinakaran.