உடலுக்கு எது நல்லது, கெட்டது என பார்த்துப் பார்த்து சாப்பிட்ட காலம் மாறிப்போய், தற்போது எந்த உணவில் அதிக சுவை உள்ளது, எந்த உணவில் அதிக நிறம் உள்ளது என்பதைப் பார்த்து சாப்பிடும் காலம் வந்துவிட்டது. அப்படி சுவையுடன் சாப்பிடும் உணவுகளில் எது போன்ற கலவைகள் கலந்துள்ளன என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் நாவிற்கு சுவை அளித்தால் மட்டும் போதுமென்று தற்போதைய இளைய தலைமுறையினர் பல உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் காலப்போக்கில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடைசி வரை மருந்து, மாத்திரைகளுடன் நடமாடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
என்றாவது ஒருநாள் ஆசைக்காக சாப்பிட்டால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுப் பொருட்களை தினம் தினம் தேடிப் பிடித்து சாப்பிட்டு வருவது பல்வேறு சிக்கல்களை அவர்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது. இருந்தபோதிலும் மாத்திரையை சாப்பிட்டு விட்டு மீண்டும் இனிப்பை தேடிச் செல்லும் சர்க்கரை நோயாளிகள் போல தற்போதைய இளைய தலைமுறையினர் மாறிவிட்டனர். அதுவும் மாலை வேளையில் அவர்கள் தேடிப் பிடித்து சாப்பிடும் சிற்றுண்டிகளை கண்டாலே அச்சமூட்டும் வகையில் உள்ளன.
மாலை வேளையில் பெரும்பாலும் போண்டா, பஜ்ஜி, வடை போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு வந்த நம் மக்கள் தற்போது சாண்ட்விச், பாவுபஜ்ஜி, பேல் பூரி, பானிபூரி, கட்லட் போன்ற வடநாட்டு உணவுப் பொருட்களை அதிகம் வாங்கிச் சாப்பிட தொடங்கி விட்டனர். இதன் காரணமாக வடநாட்டில் இருந்து ஏராளமானோர் தொழில் செய்ய சென்னை போன்ற பெரு நகரங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.
அவர்கள், சென்னைக்குச் சென்று பானி பூரி கடை வைத்து பிழைத்துக் கொள்வேன் என அசாதாரணமாக கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஏனென்றால் மாலை வேளையில் ஒவ்வொரு பானிபூரி கடை முன்பும் கையில் தட்டு அல்லது சிறிய அளவிலான குடுவகைகளை வைத்துக்கொண்டு நம்மவர்கள் கையேந்துவதும், ஒரு பூரியை எடுத்து அதை ஒரு திரவத்துக்குள் முக்கி சிறிது வெங்காயத்தை உள்ளே போட்டு அப்படியே வாயில் போட்டு மெய்மறந்து சாப்பிடுவதும் தினமும் நாம் காணும் காட்சிகளில் ஒன்று.
அப்படி அந்த பானிபூரியில் என்னதான் இருக்கிறது, அதை எவ்வாறு செய்கிறார்கள், அதை தருபவர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார்கள், இதை சாப்பிடுவதால் எந்த நன்மைகள் நமது உடலில் உண்டாகும், அல்லது எது போன்ற நோய்கள் நம்மை வந்து சேரும் என எதையும் அறியாமல் அப்படியே சாப்பிட்டு விட்டு கித்னா பையா என கேட்டு பணத்தை கொடுத்து விட்டுச் செல்லும் சூழ்நிலையில்தான் தற்போது நம் மக்கள் உள்ளனர்.
எந்த ஒரு உணவுப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதன் நன்மை தீமைகளை அறிந்து சாப்பிட வேண்டும் என நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதிலும் காலத்திற்கு ஏற்றவாறு எந்த உணவுகளை எவ்வாறு சாப்பிட வேண்டும், எந்த சீர்தோச நிலைக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற பல விஷயங்களை நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால் இவை எல்லாவற்றையும் மறந்து விட்டு தற்போது சுவை மற்றும் நிறத்திற்கு அடிமையாகி நாம் நமது ஆரோக்கியத்தை இழந்து வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.
அந்த வகையில் சென்னையில் ஒவ்வொரு பள்ளிக்கூடம், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்கூடாக நாம் ஒரு பானிபூரி கடையை பார்க்கலாம். சாதாரணமாக ஒரு சிறிய வண்டியில் பானிபூரி பாக்கெட்டுகளை அந்த வண்டி முழுவதும் சுற்றி தொங்கவிட்டு ஒரு சிறிய பானை அல்லது குவளையில் தண்ணீர் ஊற்றி வட மாநிலத்தவர்கள் வியாபாரம் செய்வதை பார்க்கிறோம்.
அப்படி என்னதான் இந்த பானிபூரியில் இருக்கிறது என்று பார்த்தால், இது ஒரு வட மாநில சிற்றுண்டி வகையைச் சேர்ந்த உணவுப் பொருளாகும். பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் இது மிகவும் பிரபலம். இந்தியாவில் முதன்முதலில் தெற்கு பீகார் பகுதியில் இந்த பானிபூரி கலாச்சாரம் தோன்றியது எனக் கூறுகிறார்கள். இதனை அந்த பகுதியில் கோல் கப்பா என அழைப்பார்கள்.
தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் நேபாளில் இதனை பானிபூரி என அழைக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்றபடி இதற்கு பல்வேறு பெயர்களை சூட்டுகிறார்கள். பூரியை செய்வதற்கு மைதா, ரவை, தண்ணீர், எண்ணெய், உப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். பானியை செய்வதற்கு புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், வெல்லம், புளி, சீரகத்தூள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
அதற்குள் வைக்கும் மசாலாவை செய்வதற்கு உருளைக்கிழங்கு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் சில மசாலாக்களை பயன்படுத்துகின்றனர். மசாலா உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, அதில் சீரகத்தூள் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்கின்றனர். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த பூரியை உடைத்து, குறிப்பிட்ட இந்த உருளைக்கிழங்கு மசாலாவை அடைத்து அதை பானி எனப்படும் தண்ணீரில் நனைத்து அந்த ஓட்டைக்குள் நீர் இருக்கும்படி தருகிறார்கள்.
இதில் புளிப்பு மற்றும் காரம் சேர்ந்த ஒரு கலவை சுவையாக நமக்கு கிடைக்கிறது. தற்போது சுவைக்காக பானிபூரியில் தயிர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சேர்த்து தருகிறார்கள். இந்த பூரிகளை ஒவ்வொரு கடைக்காரரும் தனித்தனியாக செய்வதில்லை. பூரிகளை மொத்தமாக வாங்கி அதை பயன்படுத்துகிறார்கள். அந்த பூரிகளை இவர்கள் எந்த எண்ணெயில் செய்கிறார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். மேலும் அதில் மைதா கலந்திருப்பதால் கண்டிப்பாக அது உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.
மேலும் பூரியை பெரும்பாலும் தங்கள் விரல்களால் தான் கடைக்காரர்கள் உடைக்கிறார்கள். அவ்வாறு உடைக்கும்போது அவர்களின் கை எவ்வளவு சுத்தமாக உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்களது நகத்தில் படிந்துள்ள அழுக்குகள், மேலும் கையில் உள்ள அழுக்குகள் பானியில் கண்டிப்பாக ஒட்டிக் கொள்ளும். எனவே முடிந்தவரை கடைக்காரர்கள் வெறும் கைகளால் அதனை உடைக்க நாம் அனுமதிக்க கூடாது.
சுத்தமில்லாமல் பரிமாறப்படும் உணவு வகைகளை சாப்பிடுவதால் வயிற்றில் புழுக்கள் உற்பத்தியாகி அது பல்வேறு தொற்று வியாதிகளை ஏற்படுத்திவிடும். மேலும் கடைக்காரர்களுக்கு வேறு விதமான கொடிய நோய்கள் இருப்பின் அதுவும் நம்மை தொற்றிக் கொள்ளும் அபாய சூழ்நிலையும் உள்ளது. மேலும் பானையில் உள்ள தண்ணீர் சுகாதாரத்தன்மை உடையதா என்பதையும் பார்க்க வேண்டும். பல்வேறு இடங்களில் மொத்தமாக அடர்த்தியான கலவைகளாக பானியை செய்து கொண்டு வந்து, காலியாகக் காலியாக அதில் அருகில் உள்ள இடங்களில் தண்ணீரை நிரப்பி விற்று வருகின்றனர்.
மேலும் அதில் கலக்கும் கொத்தமல்லி, புளி, சீரகம் உள்ளிட்டவை நல்லமுறையில் தயாரிக்கப்படுகின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். தற்போது இவைகளில் சுவைகள் வர இது போன்ற பொருட்களை தனித்தனியாக பயன்படுத்தாமல் மொத்தமாக பானி மசாலா என்று இருக்கக்கூடிய மசாலா பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் சுவைக்காக அதிகப்படியான மசாலாக்கள் சேர்க்கப்படுவதால் அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.
மேலும் குறிப்பிட்ட அந்த மசாலாவை தயார் செய்யும்போது சுத்தமாக அதனை தயார் செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே பானிபூரி விஷயத்தில் 3 இடங்களில் அதிகளவில் தவறுகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள் பானி பூரி சாப்பிடும்போது முதலில் அந்த கடை எங்குள்ளது, சுத்தமாக உள்ளதா, சுகாதாரமாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். தெருவோரக்கடைகள், சாக்கடை ஓரம், குப்பைத்தொட்டி ஓரம் கடைகள் இருந்தால் கண்டிப்பாக அந்த கடைகளை தவிர்க்க வேண்டும்.
மேலும் கையுறையில்லாமல் கடைக்காரர் பானிபூரி உடைக்க அனுமதிக்கக் கூடாது. மேலும் பானிபூரியை எடுத்து அவர்களது பானையில் நனைத்து தரும்படி சொல்லக்கூடாது. பதிலாக தனியாக ஒரு சிறிய பாத்திரத்தில் பானியை வாங்கி நாமே அதை ஊற்றி சாப்பிடலாம். மேலும் மசாலா கலவை உள்ளிட்டவை மிகவும் காரமாக, புளிப்பாக இருக்கக் கூடாது.
இவற்றையும் மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். முடிந்தவரை என்றாவது ஒருநாள் சாப்பிட்டால் தவறு கிடையாது. ஆனால் இதை தினந்தோறும் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக வயிறு சம்பந்தமான பிரச்னைகளும், தொற்றுநோய்களும் கண்டிப்பாக வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே காசு கொடுத்து நோயை வாங்கும் சூழ்நிலையை மாற்றி சத்தான பாரம்பரிய உணவுகளை மக்கள் சாப்பிட வேண்டும் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
மாலை நேர ஸ்நாக்ஸ்
ஒரு பொருளுக்கு வரவேற்பு இல்லை என்றால் கண்டிப்பாக அதனை இவ்வளவு பேர் வியாபாரம் செய்ய மாட்டார்கள். அந்த அளவிற்கு வியாபாரம் உள்ளதால்தான் வட மாநிலத்தவர்கள் அதிகமாக இங்கு வந்து தங்களது பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு நம்மூர் போண்டா, பஜ்ஜி மற்றும் சிற்றுண்டி வகைகளை தின்று தின்று நம்மவர்களுக்கு அலுத்துவிட்டது. இதன் காரணமாக வட மாநில உணவுப்பொருட்களை தேடிப் பிடித்து சாப்பிட தொடங்கியுள்ளனர். குறிப்பாக, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் இளைஞர்கள், சிறுவர்கள் அதிகளவில் இந்த பானி பூரியை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
ரசாயனங்கள் அதிகம்
கோதுமையில் உள்ள நார் சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. மைதா மிருதுவாக இருக்க அலொக்ஸன் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது. இதனால் இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு, ஏராளமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த ரசாயனத்தால் செரிமான கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதேபோல் மைதாவின் வெண்மை நிறத்திற்காக பென்சாயில் பெராக்ஸைடு என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. இது ஜவுளி துறையில் துணிகளை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் ரசாயனமாகும். மேலும் இது மருத்துவ தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற பொருட்களை பயன்படுத்தி மைதாவால் பூரிகளை தயாரிக்கின்றனர். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
The post தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் உணவாக மாறுகிறதா பானிபூரி..? appeared first on Dinakaran.