புதுடெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் என இந்த ஆண்டு பல புகார்கள் எழுந்துள்ளன. கடந்த 6 ஆண்டாக இப்படிப்பட்ட மோசடிகள் பல இடங்களில் நடந்திருப்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீட்டை ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு மட்டும் எதிர்த்து வந்த நிலையில், இப்போது ஒட்டுமொத்த நாடும் நீட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது.
இந்த நிலையில், நீட் விவகாரம் மூலம் மற்றொரு மாபெரும் மோசடி அம்பலமாகி உள்ளது. இந்த தேர்வினை நடத்தும் தேசிய தேர்வு முகமை தொடர்பாக பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக இதுபோன்ற போட்டித் தேர்வுகளை நடத்துவதற்காக அமைக்கப்படும் தேர்வாணையங்கள் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு முறைப்படி அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படுவதுதான் வழக்கம்.
அதுபோலத்தான் மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), சிபிஎஸ்இ, பல்கலைக்கழக மானிய குழு போன்றவை செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதுபோன்ற முறைப்படியான அமைப்புகள் நடத்தி வந்த நீட், யுஜிசி நெட், ஜேஇஇ, ஜிபேட், சிமேட், கியூட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவதற்காக தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக தேசிய தேர்வு முகமையை ஒன்றிய பாஜ அரசு 2018ல் அமைத்தது.
இந்த முகமையில் நாடு முழுவதும் சுமார் 1.3 கோடி மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனர். அப்படிப்பட்ட கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய என்டிஏ என்பது ஒன்றிய அரசின் அமைப்பாகத்தான் இதுவரையிலும் கருதப்பட்டது. நீட் போன்ற போட்டித் தேர்வுகளை அரசு தான் நடத்திக் கொண்டிருக்கிறது என நம்பி அதன் மீது நம்பிக்கை வைத்து கோடிக்கணக்கான மாணவ, மாணவிகள் இரவு பகலாக படித்து தேர்வு எழுதுகின்றனர்.
ஆனால் என்டிஏ என்பது ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த அமைப்பானது, 1860 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான சான்றிதழை என்டிஏவின் இணையதளத்திலும் பார்க்க முடியும். இதுதான் தற்போது பெரும் சந்தேகங்களை எழுப்பி உள்ளது. என்டிஏ என்பது வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன? இதற்கென ஒரு பொதுக்குழு என்பது இல்லை.
இந்த முகமையை அமைக்க எந்தவொரு நாடாளுமன்ற சட்டமும் நிர்வகிக்கவில்லை, ஒன்றிய மாநில அரசுகள் இடம் பெறவில்லை, மேலும் இது அரசு ஊழியர்களின் நடத்தையை நிர்வகிக்கும் விதிகளுக்கு உட்பட்டதாகவும் இல்லை. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறையின் கீழ் இந்த முகமைக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது. இது கல்வி அமைச்சகத்தின் கீழான ஒரு தன்னாட்சி மற்றும் தன்னிறைவு மிக்க தேர்வு முகமை என்று கூறுகிறது.
ஆனால், பத்து பேர் கொண்ட நிர்வாகக் குழுதான் தேசிய தேர்வு முகமையை வழிநடத்துகிறது. இதனால், தேசிய தேர்வு முகமை இப்போது தனியார் சங்கமாக மட்டுமே செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த அமைப்பு யார் கட்டுப்பாட்டில் உள்ளது? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்டிருப்பதால் என்டிஏவில் ஏதாவது தவறு நடந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை. சுயாதீனமான இந்த அமைப்புதான் அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டும். எனவே ஊழல்கள் அம்பலமானால் கூட அதற்கு அரசு பொறுப்பேற்காமல் இருந்து விட முடியும்.
இந்த முகமையின் முறைகேடுகள் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் போன்றவை இந்த முகமை நடத்திய 15 தேர்வுகளை சிதைத்துள்ளன. எனவே, நீட் தேர்வு மட்டுமல்ல தேசிய தேர்வு முகமையை ஒழித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
* சட்டப்பூர்வ ஆதரவு வழங்காதது ஏன்?
கடந்த பத்தாண்டுகளில், பாஜ தலைமையிலான ஒன்றிய அரசாங்கமானது சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் மசோதாக்கள் உட்பட, மக்களவையில் 427 மசோதாக்களையும், மாநிலங்களவையில் 365 மசோதாக்களையும் நிறைவேற்றியது. இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமைக்கு சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு எந்த ஆர்வமும் காட்டவில்லை. இந்தச் சட்டம் இல்லாததால், தேசிய சோதனை முகமை பொறுப்புக்கூறலைத் தவிர்க்கவும், ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக எந்த எதிர்விளைவுகளையும் சந்திக்காமல் இருக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
* உலகின் 2வது பெரிய தேர்வு முகமை என்டிஏ
என்டிஏ நடத்தும் பல்வேறு தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி மாணவர்கள் பதிவு செய்கின்றனர். 2023ல் அதிகபட்சமாக 1.23 கோடி மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் உலகின் 2வது பெரிய தேர்வு நடத்தும் அமைப்பாக என்டிஏ மாறி உள்ளது. இந்த ஆண்டு நீட் யுஜி தேர்வை மட்டும் 24 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வை 11 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். கியூட் யுஜி மற்றும் கியூட் பிஜி தேர்வை முறைகே 13.4 லட்சம், 99,717 மாணவர்கள் எழுதி உள்ளனர். ஜேஇஇ மெயின் தேர்வை 14.7 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வை நடத்துதல், விடைத்தாள் திருத்துதல் போன்ற முக்கிய பொறுப்புகளை என்டிஏ வகிக்கிறது.
என்டிஏ நடத்தும் தேர்வுகள்
* கியூட் யுஜி
* கியூட் பிஜி
* யுஜிசி நெட்
* ஜேஇஇ
* சிமேட்
* சிமேட்
* ஜேஎன்யு நுழைவுத் தேர்வு
* ஐசிஏஆர் அகில இந்திய நுழைவுத்தேர்வு
* ஓட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத்தேர்வு
* பார்மஸி ஆப்டிடியூட் டெஸ்ட்
* என்ஐஎப்டி நுழைவுத்தேர்வு
* ஐஜிஎன்ஓயு பிஎச்டி மற்றும் ஓபன்மேட் (எம்பிஏ) நுழைவுத்தேர்வு
* சிஎஸ்ஐஆர் தேசிய தகுதித் தேர்வு
* ஆசிரியர்களுக்கான வருடாந்திர புதுப்பித்தல் தேர்வு
* ஸ்வயம் தேர்வு
The post வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்ட என்டிஏ தேர்வு நடத்துவது அரசா, தனியாரா? முறைகேட்டிற்கு பொறுப்பேற்காமல் தப்ப திட்டமா? நீட் விவகாரத்தில் மற்றொரு மாபெரும் மோசடி அம்பலம் appeared first on Dinakaran.