×

கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து கபட நாடகமாடும் எடப்பாடி: மாஜி எம்எல்ஏ கருணாஸ் சாடல்

சென்னை: கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி கபட நாடகமாடுகிறார் என முக்குலத்தோர் புலிப்படைக்கட்சி தலைவர் கருணாஸ் சாடியுள்ளார். இது குறித்து முக்குலத்தோர் புலிப்படைக்கட்சி தலைவர் கருணாஸ் வெளியிட்ட அறிக்கை: கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து கடந்த சில நாட்களாக எட்டப்பர் எடப்பாடியார் நடத்தும் கள்ள நாடக காட்சிகள் சட்டசபையில் தொடங்கி உண்ணாவிரதம் பந்தல் வரை சகிக்க முடியவில்லை. தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, எடப்பாடி தமிழ்நாட்டு உரிமையை மீட்க ஒரு நாளும் உண்ணாவிரதம் இருந்ததில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடிய போது அவர்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்துவிட்டு தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னவராச்சே, இது மட்டுமா எத்தனையோ. அத்தனை தகிடுத்தத்தங்களையும் மறந்துவிட்டு இன்று உண்ணாவிரத நாடகமாடுகிறார் எடப்பாடி. சட்டமன்றத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சனைக்கு பேசாது மௌனமாய் இருந்த எடப்பாடி இன்று கள்ளக்குறிச்சிக்கு காவடி ஆடுகிறார்.

அவர் ஆட்சியில் இருந்தபோது சபாநாயகர் தனபாலை வைத்து என்னென்னவெல்லாம் செய்தார் மறந்து விட்டார் போல, எத்தனை முறை மக்கள் பிரச்சனையை பேச வந்த திமுகவை சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றினார். அதுவும் மறந்துவிட்டார் போல, எல்லாம் நாடகம். எடப்பாடி செய்வது அரசியல் நாடகம் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 53 பேர் உயிரிழந்தனர். 200 பேரின் பார்வை பறிபோனது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஒழிந்ததா, அப்போதெல்லாம் எங்கிருந்தார் எடப்பாடி.

பாஜக ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் ஏழெட்டு ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்கள் நடந்தேறின ஒவ்வொரு முறையும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநில முதல்வர்களை பதவி விலகக்கோரி யாரும் கூறவில்லை. அதேபோல் அதிமுக ஆட்சியில் நடந்த மரணங்களுக்கு யாரும் பதவி விலகுமாறு கூறவில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகவேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதியிலும் நாக்கை புடுங்கிக் கொள்ளும் அளவிற்கு படுதோல்வியடைந்து மண்ணை கவ்விய எடப்பாடி வெட்கமே இல்லாமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுப் பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு உண்ணாவிரதம் இருக்கிறார். அன்று தூத்துக்குடி காவல் நிலையத்தில் இருவர் இறந்ததற்கு சிபிஐ விசாரணை கேட்டார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

இப்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்கிறோம் என்று பெரிய புத்திசாலி போல கேள்வி கேட்கிறார் பழனிசாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்திருந்தால் சிபிஐ விசாரணை கூட கேட்கலாம் தவறில்லை ஆனால், அனைத்து நடவடிக்கைகளும் எடுத்ததை பார்த்த பிறகும், சிபிஐ விசாரணை கேட்கிறார் என்றால், அதுதான் எடப்பாடியின் அரசியல் நாடகம். பாஜகவின் பத்தாண்டுகால பாசிச அழிவு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை போன கட்சி அதிமுக சிறுபான்மை இசுலாமிய இன மக்களுக்கும், ஈழத் தமிழ் மக்களுக்கும் பச்சைத் துரோகம் இழைத்த அதிமுகவை தமிழ்நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். மக்களுக்கான அரசியலை செய்ய எடப்பாடி கற்றுக்கொள்ளட்டும் சந்தடி சாக்கில் சந்தியா ராகமெல்லாம் பாடி மக்களை ஏமாற்றமுடியாது மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள்.

The post கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து கபட நாடகமாடும் எடப்பாடி: மாஜி எம்எல்ஏ கருணாஸ் சாடல் appeared first on Dinakaran.

Tags : MLA ,Karunas Chatal ,Chennai ,LTTE ,Karunas ,Edappadi Palaniswami ,Trikulamtore ,Edappadi ,Kallacharaya ,
× RELATED அரசு மேய்க்கால் புறம்போக்கு இடம்,...