×

சென்னையில் ரூ.50 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் ரூ.50 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் மருத்துவமனை அமைக்கப்படும். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். அரசு மருத்துவமனைகளில் பாத சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை உருவாக்கப்படும். கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்படும். தஞ்சை அரசு மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கு மருத்துவமனை அமைக்கப்படும். ரூ.1.28 கோடி மதிப்பில் பச்சிளங் குழந்தைகளை கண்காணிக்க புதிய திட்டம் தொடங்கப்படும்.

மாவட்டந்தோறும் போதை மீட்பு மையங்கள் மற்றும் முகாம்கள் வாயிலாக விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு உரிய மறுவாழ்வு சேவைகள் அளிக்கப்படும். மிக அதிக உடல் எடையுடன் (Morbid Obesity) உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, குடலிறக்கம், கல்லீரல் செயலிழப்பு, இதயநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் உள்ளோருக்கான உயிர்காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை (Bariatric, Surgery) சென்னை ஸ்டான்லி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும்.

மலைவாழ் மக்களுக்கு அவசர மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் இரு சக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் (Bike Ambulance) ரூ.1.60 மதிப்பீட்டில் வழங்கப்படும். ரூ 3.19 கோடி மதிப்பீட்டில் சிறுநீரகம் – விழித்திரை பாதிப்புகளுக்கான சிறப்பு பரிசோதனைகள் செய்யப்படும். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் நோய்க் கட்டுபாட்டின்மையால் வரக்கூடிய விழித்திரை மற்றும் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான சிறப்பு பரிசோதனைகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.

The post சென்னையில் ரூ.50 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Superman ,Subramanian ,K. K. ,Nagar Government ,Rehabilitation Hospital ,Tamil Nadu ,
× RELATED ரூ.13கோடியில் அதிநவீன மூளை ரத்தநாள...