×

களியக்காவிளை அருகே சீரமைத்து ஒரே மாதத்தில் சேதமடைந்த சாலை

* பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

* மீண்டும் சீரமைப்பதாக ஒப்பந்ததாரர் தரப்பு உறுதி

களியக்காவிளை : களியக்காவிளை அருகே மலையடி ஊராட்சிக்கு உட்பட்ட பரக்குன்று – செம்மாங்காலை ரோடு கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதை சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழி செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வந்தனர். இதன் காரணமாக பரக்குன்று – செம்மாங்காலை ரோட்டை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் சீரமைக்க 1.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்தது.

பணிகள் நிறைவடைந்து ஒரு மாதத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சாலை சேதமடைந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து நடத்திய இந்த திடீர் ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இன்ஜினியர், ஆர் ஐ உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். ஒரு மாதத்தில் சேதமடைந்த இணைப்பு சாலையை மீண்டும் தரமாக சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் தரப்பில் ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதையடுத்து ஒப்பந்ததாரரின் பிரதிநிதி ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அதிகாரிகளிடம் மீண்டும் இந்த ரோட்டை சீரமைத்து தருவதாக உறுதியளித்தார். இதை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து ஒப்பந்ததாரரின் பிரதிநிதி அதிகாரிகள் முன்னிலையில் எழுதி கொடுத்தார். மழை சீசன் முடிந்தவுடன் மீண்டும் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைத்து புது தார்ச்சாலை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்ததாரர் உறுதிமொழி கொடுத்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

The post களியக்காவிளை அருகே சீரமைத்து ஒரே மாதத்தில் சேதமடைந்த சாலை appeared first on Dinakaran.

Tags : Kalyakawla ,KALIAKAVILA ,PARAKUNYA ,CHEMMANGALAI ROAD ,MALAYADI URACHI ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி- களியக்காவிளை...