×

தோவாளை சானல் சீரமைக்கப்படாததால் 6500 ஏக்கர் விவசாயம் பாதிப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

*கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நாகர்கோவில் : தோவாளை சானல் சீரமைக்கப்படாததால் 6 ஆயிரத்து 500 ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து நேற்று விவசாயிகள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் தர் தலைமை வகித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நீர்வளத் துறை செயற்பொறியாளர் ஜோதிபாசு, வேளாண்மை இணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன், கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் சிவகாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜென்கின் பிரபாகர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், வேளாண்மை துறை துணை இயக்குநர் வாணி உட்பட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், தோவாளை சானலில் 6500 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 9 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தோவாளை சானலில் தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் உள்ளது . கன்னிப்பூ சாகுபடி தொடங்க வேண்டாம் என்று முன்கூட்டியே கூறியிருந்தால் விவசாயிகளுக்கு இந்த இழப்பு ஏற்பட்டு இருக்காது. 15 நாளில் சீரமைப்பு பணிகளை முடித்து விடுவோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் ஒன்றரை மாதம் ஆனாலும் சீரமைப்பு பணிகள் நிறைவு பெறாத நிலைதான் உள்ளது. கடந்த ஆண்டுகளில் வில்லுக்குறி அருகில் இரட்ரைக்கரை சானல் உடைப்பு ஏற்பட்டபோதும் விவசாயம் பாதிக்கப்பட்டது. இப்பொதும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்ட போதும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த ஆண்டு இதுவரை எந்த சானல்களும் தூர்வாரவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் இந்த நீர்வளத்துறை அதிகாரியை வைத்துக்கொண்டு எந்த விவசாயத்தையும் மேற்கொள்ள முடியாது. நீர்வளத்துறை செயற்பொறியாளர் தேவையில்லை, அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர், மே மாதம் தான் தோவாளை கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பணிகள் தொடங்கி ஒரு மாத காலத்தில் முடிக்கப்பட்டிருக்க முடியும். மழை தான் பணிகள் தாமதத்திற்கு காரணம், என்று தெரிவித்தார். இதனையடுத்து விவசாயிகள், நீர்வளத்துறை, வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை இணைந்து ஒரு முடிவெடுத்து விவசாயிகளிடம் கூறியிருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக 6000 ஏக்கர் விளைநிலங்களில் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும். அவ்வாறு உறுதி அளித்தால் தொடர்ந்து இந்த கூட்டத்தை நடத்தலாம், இல்லையெனில் கூட்டம் தேவை இல்லை என்று விவசாயிகள் கூறினர். அப்போது விவசாயிகள் நெற் பயிர்களையும் கொண்டுவந்து கலெக்டரிடம் காண்பித்தனர். அப்போது கலெக்டர் நான் நேரில் வந்து பார்வையிட்டுள்ளேன் என்றார்.

அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கூட்ட அரங்கில் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கூட்டத்திலிருந்து அவர்கள் வெளியேறினர். பின்னர் அங்கு தரையில் அமர்ந்தும் கோஷம் எழுப்பினர்.

அப்போது அங்கிருந்த விவசாயிகள் சிலர் தாங்கள் கொண்டுவந்த நெற்பயிரை கலெக்டர் அலுவல வளாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் நடவு செய்வது போன்று காண்பித்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டது. எஞ்சியிருந்த இதர விவசாயிகளிடமிருந்து கலெக்டர் தர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் தர் பார்வையிட்டார்.

20 நாட்களில் தண்ணீர்

கூட்டத்தில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஜோதிபாசு கூறுகையில், ‘தோவாளை சானலில் தூவச்சி பகுதியில் 2 முறை உடைப்பு ஏற்பட்டது. அப்போது தற்காலிகமாக அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நிரந்தர தீர்வு காணும் வகையில் காங்கிரிட் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாத காலத்தில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர் மழை காரணமாக தற்போது வரை பணிகள் நீடிக்கிறது.

20 நாட்களில் பணிகள் முடித்து தண்ணீர் வழங்கப்படும். கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி திறக்கப்பட்ட அணைகள் பிப்ரவரி 28 வரை விநியோகம் செய்யப்பட வேண்டிய நிலையில் மார்ச் 30 வரை தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. பிரச்னை உள்ள இடங்களில் அதிகாரிகள் அடைப்புகளை சரி செய்து வருகின்றனர். எனவே தண்ணீர் விநியோகத்தில் பிரச்னை இல்லை’ என்றார்.

*மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவுரை 684 மி.மீ மழை பெய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 197 மி.மீ அதிகம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

*பி.எம் கிசான் திட்டத்தில் தகுதியான விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், புத்தன் அணையை தூர்வார வேண்டும். கால்வாய் தூர்வாரும் பணிகளை முன் கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

The post தோவாளை சானல் சீரமைக்கப்படாததால் 6500 ஏக்கர் விவசாயம் பாதிப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Thovalai channel ,Nagercoil ,Dovalai channel ,Kumari District ,Farmers Grievance Redressal Day ,Thovalai Canal ,Dinakaran ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...