×

கம்மல், மூக்குத்தி ஒன்றரை சவரன் நகைக்காக காது, மூக்கு அறுத்து மூதாட்டி கொடூர கொலை

*ஆலங்காயம் அருகே பயங்கரம்

ஆலங்காயம் : ஆலங்காயம் அருகே கம்மல், மூக்குத்தி என ஒன்றரை சவரன் நகைக்காக காது, மூக்கை ெகாடூரமாக அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பலப்பல் நத்தம், ஏரி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அனுமக்காள்(80). இவர்களது ஒரே மகள் சம்பூரணம் (35) என்பவருக்கு அதே ஊரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் கணவனுடன் அதே தெருவில் 3 வீடுகள் தள்ளி வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கணவன் கோபால் இறந்துவிட்டதால் அனுமக்காள் தகர ஷீட்டால் ஆன வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அனுமக்காள் வீட்டிலிருந்து வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சம்பூரணம் வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அனுமக்காள் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார். அவரது காது, மூக்கில் ரத்த காயம் இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதபடி வெளியில் ஓடி வந்த சம்பூர்ணம் இது சம்பந்தமாக ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட் ஜான், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார், ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய் கீர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, அவரது மூக்கு மற்றும் காதில் அறுக்கப்பட்ட ரத்தகாயம் இருந்தது. எனவே, மர்ம ஆசாமிகள் அவரை கொலை செய்து, காது மற்றும் மூக்கை அறுத்து காதில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் கம்மல், மூக்குத்தி மற்றும் காலில் அணிந்திருந்த வெள்ளி தண்டை ஆகியவற்றை பறித்து சென்றுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓடி சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், கொள்ளையர்கள் தாக்கியதில் அனுமக்காளின் கழுத்து எலும்பு நொறுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. எனவே மூதாட்டியை கொடூரமாக தாக்கி கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கம்மல், மூக்குத்தி ஒன்றரை சவரன் நகைக்காக காது, மூக்கு அறுத்து மூதாட்டி கொடூர கொலை appeared first on Dinakaran.

Tags : Kammal ,Payankaram Alangayam ,Alangayam ,Tirupattur District Aalangayam ,Balapal Nadham ,
× RELATED உலகநாத நாராயணசாமி அரசு கலைக்...