×

கோவையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் பறிமுதல்

 

கோவை, ஜூன் 28: சென்னையில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு இயக்கிய வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் 1,535 ஆம்னி பஸ்கள் பதிவு செய்து முறையாக இயங்கி வருகிறது. இவை தவிர, 943 ஆம்னி பஸ்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்று, தமிழகத்திற்குள் விதிகளை மீறி இயங்கி வருகிறது.

இதனை ஒழுங்குபடுத்தும் வகையில், கடந்த 14-ம் தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் அரசின் உத்தரவை மீறி வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என கண்காணித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, கோவை மாவட்டத்திலும், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு செல்வதற்காக கோவை வழியாக ஆம்னி பஸ் ஒன்று வந்தது. இந்த ஆம்னி பஸ் கோவை காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையம் அருகே காலையில் வந்தது.

அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அந்த பஸ்சில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பஸ் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் என்பது தெரியவந்தது. பின்னர், பஸ்சில் இருந்த கேரளாவை சேர்ந்த 21 பயணிகளும் கீழே இறக்கிவிட்டு, அவர்களை சொந்த ஊர் செல்ல கேரள மாநில அரசு பஸ்சில் அனுப்பிவைத்தனர். மேலும், ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டு மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து பஸ்சை விடுவித்தனர்.

The post கோவையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : bus ,Coimbatore ,Chennai ,Kerala ,Tamil Nadu ,omni bus ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல்...