×

திருமணம் செய்வதாக கூறி கோவை மாணவி பலாத்காரம்: சென்னையை சேர்ந்த வாலிபருக்கு வலை


மதுரை: திருமணம் செய்வதாக கூறி கோவை மாணவியை பலாத்காரம் செய்த சென்னை வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். கோவையை சேர்ந்த மாணவி, அங்குள்ள மகளிர் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு கடந்தாண்டு தோழி ஒருவர் மூலம், சென்னையை சேர்ந்த கார்த்தி (எ) மாரியப்பன் (34) அறிமுகமானார். பின்னர் மாணவியை பிடித்திருப்பதாக சொல்லி பலமுறை கார்த்தி போன் செய்துள்ளார். இதனை மாணவி தவிர்த்துள்ளார். பிறகு தோழி மூலம் கட்டாயப்படுத்தி பேச வைத்து, கார்த்தியும், மாணவியும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். கடந்த 14.2.2023ல் கார்த்தி வெளியே செல்லலாம் எனக்கூறி மாணவியை அழைத்துள்ளார். இதற்கு மாணவி மறுத்த நிலையிலும் கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்றார். மதுரை கடவூர் ரோட்டில் காட்டுப்பக்கமாக வண்டியை திருப்பி சென்றவர், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வலுக்கட்டாயமாக காட்டிற்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் மாணவியை கோவையில் உள்ள அவரது வீட்டில் விட்டுச் சென்று விட்டார். வீட்டில் இருப்பவர்கள் சந்தேகப்பட்டதால், கார்த்தியுடன் பேசுவதை மாணவி தவிர்த்து வந்துள்ளார். ஒருநாள் மாணவிக்கு போன் செய்த கார்த்தி, ‘‘உடனடியாக வா. திருமணம் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் இருவரும் மதுரையில் தனிமையில் இருந்த போட்டோக்கள், வீடியோக்களை உன் அப்பாவிற்கும், மற்றவர்களுக்கும் அனுப்பி விடுவேன்’’ என்று மிரட்டியுள்ளார். மேலும் மாணவியின் தந்தைக்கும் போன் செய்து, ‘‘உங்கள் மகளை என்னுடன் பேசச் சொல்லுங்கள். இல்லையெனில் கொலை செய்து விடுவேன்’’ எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர், மகளை அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள மாணவியின் சித்தப்பா வீட்டிற்கே வந்து விட்டனர்.

ஆனாலும் கார்த்தி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். தற்போது மாணவிக்கு 19 வயதாகிறது. 18 வயதிற்குள் இருந்த சிறுமி என்று தெரிந்தும், மகளை பலாத்காரம் செய்ததோடு, தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, கார்த்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி மாணவியின் தந்தை மதுரை சத்திரப்பட்டி காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதன்பேரில் போக்சோவின் கீழ் வழக்கு பதிந்து கார்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

மாணவி பலாத்காரம்; பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
தர்மபுரி மாவட்டம், பொம்மிடியைச் சேர்ந்தவர் சரவணன் (48). தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர். இப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்த சிறுமிக்கு தந்தை இறந்து விட்டதால், தேவையான உதவிகளை சரவணன் செய்து வந்துள்ளார். அந்த மாணவி, தர்மபுரியில் உள்ள அரசு பள்ளியில், சமீபத்தில் பிளஸ்2 படித்து முடித்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு பல்வேறு உதவி செய்த ஆசிரியர் அதை பயன்படுத்தி அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த மாணவி, ஆசிரியர் சரவணன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து அவரை நேற்று கைது செய்தனர்.

The post திருமணம் செய்வதாக கூறி கோவை மாணவி பலாத்காரம்: சென்னையை சேர்ந்த வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chennai ,Madurai ,
× RELATED கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல்...