×

கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவத்தை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம்: எடப்பாடி தலைமையில் நடந்தது


சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சியில் கடந்த வாரம் நடந்த விஷ சாராய மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5 நாட்களாக பிரச்னையை கிளப்பி வந்தார். கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கலாம் என்று சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து கூறினார். ஆனால், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரவையில் அமளியிலும், ரகளையிலும் ஈடுபட்டனர். பேரவை தொடங்கி தொடர்ந்து 3 நாட்களாக அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

சபாநாயகரின் இந்த உத்தரவை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விஷ சாராய பலியை கண்டித்தும் திமுக அரசுக்கு எதிராக நேற்று காலை 9 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர். போராட்டத்தில் எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்து பங்கேற்றனர். போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. அதேநேரம் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என போலீசார் சில நிபந்தனைகளை விதித்தனர். இதனிடையே போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, அதிமுக கூட்டணிக் கட்சியான தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

The post கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவத்தை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம்: எடப்பாடி தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Adimuga MLAs ,Kalalakurichi Visharaya ,Chennai ,Edapadi Palanisami ,Kalalakurichi ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து கபட...