×

கனியாமூர் மாணவி மரண விவகாரம்; தாயாரிடம் ஏன் இதுவரை விசாரிக்கவில்லை: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் கேள்வி


சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி, 2022 ஜூலை 13ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மாணவி மரணத்துக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி 2022 ஜூலை 17ம் தேதி பல்வேறு அமைப்பினர், பள்ளிக்குள் நுழைந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன், பொருட்களையும் திருடிச் சென்றனர். இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கலவரம் தொடர்பாக 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 166 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கூட்டம் கூட்டிய திராவிட மணி என்பவரையும், உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியையும் காவல் துறையினர் இதுவரை விசாரிக்கவில்லை என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை.

நல்ல நாளுக்காக காத்து கொண்டிருக்கிறீர்களா, ஒருவேளை இருவருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் வழக்கில் சேர்ப்பீர்களா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், செல்போன் ஆய்வக முடிவுக்காக காத்திருக்கிறோம். விசாரணை நான்கு மாதங்களில் முடிக்கப்படும். ஆதாரம் இருந்தால் இருவரும் வழக்கில் சேர்க்கப்படுவார்கள். விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம் என்றார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post கனியாமூர் மாணவி மரண விவகாரம்; தாயாரிடம் ஏன் இதுவரை விசாரிக்கவில்லை: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : ICourt ,Special Investigation Team ,CHENNAI ,2 ,Kaniyamoor, Kallakurichi district ,Kaniyamur ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2...