×

நீட் ஓ.எம்.ஆர் தாள்களுக்கு எதிரான குறைகளை தெரிவிக்க கால வரம்பு உள்ளதா? தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி, ஜூலை 8க்கு விசாரணை ஒத்தி வைப்பு

புதுடெல்லி: நீட், ஓ.எம்.ஆர். தாள்களுக்கு எதிரான குறைகளை தெரிவிக்க காலவரம்பு ஏதேனும் உள்ளதா? என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மே 5ம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வு முறைகேடு தொடர்பான 32க்கும் மேலான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வின் ஓ.எம்.ஆர் தாளின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரர் தரப்பு வாதத்தில், “நீட் தேர்வு ஓ.எம்.ஆர் தாள்களை வழங்கும் பட்சத்தில் அதில் மாணவர்கள் தரப்பில் உள்ள குறைபாடு என்ன என்றும், அதன் மூலம் மாணவர்கள் வரும் காலத்தில் தங்களை மேம்படுத்தி கொள்ளவும் அது உதவியாக இருக்கும்.

அதேபோன்று ஓ.எம்.ஆர் தாள்களில் உள்ள குறைபாடுகளையும் கண்டறிய முடியும். எனவே ஓ.எம்.ஆர் நகல்களை வழங்க தேசிய தேர்வுகள் முகமைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தேசிய தேர்வுகள் முகமை தரப்பு வழக்கறிஞர், “ஓ.எம்.ஆர் தாள்களை மாணவர்களுக்கு வழங்க எங்கள் தரப்புக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

இருப்பினும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி ஒரு முடிவெடுக்க அவகாசம் வேண்டும்” என்று தெரிவித்தார். இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “நீட் தேர்வு ஓ.எம்.ஆர் தாள்களுக்கு எதிரான குறைகளை தெரிவிக்க ஏதேனும் காலவரம்பு உள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும்” என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

The post நீட் ஓ.எம்.ஆர் தாள்களுக்கு எதிரான குறைகளை தெரிவிக்க கால வரம்பு உள்ளதா? தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி, ஜூலை 8க்கு விசாரணை ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,National Examinations Agency ,New Delhi ,NEET ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் கருணை மதிப்பெண்...