×

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்


சென்னை: சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது:  டெங்கு கொசு ஒழிப்பு முன்கள பணியாளர்கள் (DBC-Dengue Breeding Checkers), கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகம் முழுவதும் சுமார் 38,000 பேர் தினக்கூலி அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ரூ200, ரூ250, ரூ300, ரூ440 என மாறுபட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் கூட மிக‌ தாமதமாக வழங்கப்படுகிறது. இதர உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்யும் ஊதியம் வழங்கப்படுகிறது. சம வேலைக்கு, சம ஊதியம் என்ற சட்ட ரீதியான உரிமை இவர்களுக்கு மறுக்கப்படுவதால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பல இடங்களில் உயர் அதிகாரிகள் பணியாளர்கள் பெறும் ஊதியத்தில் இருந்து பணத்தை பறிக்கிறார்கள். பணம் கொடுக்காவிட்டால் வேலையை விட்டு நிறுத்தி விடுவோம் என மிரட்டுகிறார்கள். கொசுப்புழு ஒழிப்புப் பணிக்கு சற்றும் தொடர்பில்லாத வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். எனவே தினக்கூலி முறையை கைவிட்டு மாத ஊதியம் ரூ21 ஆயிரமாக வழங்க வேண்டும். இவர்களை உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து விடுவிடுத்து மருத்துவ துறையின் கீழ் பணி அமர்த்த வேண்டும். இதனை வலியுறுத்தி, வரும் 30ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் நுழைவாயில் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Doctors Association ,CHENNAI ,Executives ,Doctors Association for Social Equality ,Chennai Chepakkam Press Forum ,general secretary ,Rabindranath ,DBC ,
× RELATED முதுநிலை நீட் தேர்வு ரத்து...