×

பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே கீழ்நீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிதாஸ். இவரது மனைவி தேசம்மாள் (40). இவர், அதே கிராமத்தில் தேசிய ஊரக 100 நாள் வேலை திட்ட மேற்பார்வையாளராக உள்ளார். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு செய்யூர் அருகே தண்டரை கிராமம் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சபாபதி (67) என்பவர், தனது உறவினர்கள் மூன்று பேர் வேலைக்கு வராமல் வேலைக்கு வந்தது போல் வருகை பதிவேட்டில் பதிவு செய்து சம்பளம் வழங்க வேண்டும், என்று தேசம்மாளிடம் கூறினார். அதனை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சபாபதி ஆபாசமாக பேசி மறைத்து வைத்திருந்த கத்தியால் தேசம்மாளை குத்திவிட்டு தப்பிச் சென்றார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தேசம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே தேசம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உயிரிழந்த தேசம்மாளின் அக்கா மகன் அருண்குமார் (25) என்பவர் அளித்த புகாரின்பேரில் அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிந்து சபாபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, குற்றவாளி சபாபதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து கொலை குற்றவாளி சபாபதியை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

The post பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Women's Court ,Chengalpattu ,Madurantakam ,Laksumitas ,Lower Nirpallam ,Jaipur, Chengalpattu district ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை