×

தொகுதி தோறும் மினி ஸ்டேடியம் அமைப்பது குறித்து ஆய்வு; கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டும் பணி தொடங்கப்படும்: பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

* முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கூடுதல் விளையாட்டுகள் சேர்க்கப்படும்
* ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கான ஊக்கத் தொகை உயர்வு

சென்னை: கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டும் பணி இந்த ஆண்டு தொடங்கப்படும் என்றும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கூடுதல் விளையாட்டுகள் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்: கலைஞர் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் ரூ86 கோடி செலவில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தோம். இதன்படி, 33 விளையாட்டு உபகரணங்களைக் கொண்ட இந்த உபகரணங்களை இதுவரை, மதுரை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 72 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு வழங்கியுள்ளோம். மீதமுள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் விரைவில் வழங்கப்படும்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தினோம். 15 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 3 லட்சத்து 76 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் கலந்து கொள்ள முயற்சி எடுக்கப்படும். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் இந்த ஆண்டு கூடுதல் விளையாட்டுகள் சேர்க்கப்படும். மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் சாதிக்கும் வீரர்களுக்கு அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் கடந்த ஆண்டில், 7 வீரர்கள் அரசு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023ஐ நடத்துவதற்காக சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் ரூ8 கோடியே 64 லட்சம் செலவில் ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் ரூ355 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. விளையாட்டு அரங்கங்கள் இல்லாத சட்டமன்றத் தொகுதிகளில் தலா ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற வகையில், 9 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர்கள் பலர், அவர்களுடைய தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுமா என்று வெட்டுத் தீர்மானங்கள் மூலம் கேள்வி எழுப்பினர். நிச்சயம், மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என ஆய்வு செய்து அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சேலம் மேற்கு தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மல்டி பர்ப்பஸ் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை என்றார். ரூ20 கோடியில் அந்த ஸ்டேடியம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் சிறப்பு அழைப்பின் பேரில் 20 மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து வாள்வீச்சு மற்றும் குத்துச்சண்டைப் போட்டிக்காக 30 நாட்கள் சென்னையில் தங்கி பயிற்சி பெற்றார்கள். அவர்களுக்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்றது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க இடத்தைத் தேர்வு செய்யும் பணியை இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளோம். இந்தாண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். முதல்வர் தலைமையிலான திமுக அரசு, விளையாட்டு மேம்பாட்டிற்காக எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அங்கீகாரங்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. அந்த வகையில், சிஐஐ என்ற அமைப்பின் சார்பாக, ‘விளையாட்டுக்கான வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்’ என்ற அந்த உயரிய விருதை தமிழ்நாட்டிற்கு வழங்கி கவுரவித்தது.

The post தொகுதி தோறும் மினி ஸ்டேடியம் அமைப்பது குறித்து ஆய்வு; கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டும் பணி தொடங்கப்படும்: பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : International Cricket Stadium ,Goa ,Minister Assistant Minister ,Stalin ,CM Cup Games ,Olympic Games ,Chennai ,CM Cup ,Stalyn ,Berawa ,Dinakaran ,
× RELATED கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச...