×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* தேங்காய் பர்பி கிளறும்போது ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவை போட்டால் விரைவில் பர்பி பூத்து வரும். பர்பியும் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

* அடை மாவுடன் கார்ன் பிளேக்ஸ் கலந்து செய்தால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

* வடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கலந்தால் மாவு இறுகி வடையும் நெய் வாசனையாக ஒன்றாக இருக்கும்.

* முள்ளங்கி, கேரட் இரண்டையும் துருவி உப்பு, எலுமிச்சைச் சாறு, ெபருங்காயம், கடுகு தாளித்து சாப்பிட சுவையாக இருக்கும்.

– ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.

* ஜாடியில் ஊறுகாயைப் போடுமுன் சூடாக்கிய எண்ணெயில் துணியை நனைத்து ஜாடியின் உட்புறத்தை துடைத்துப் பின்னர் ஊறுகாயை போட எளிதில் கெடாது.

* முட்டைக்கோஸை தேங்காய் எண்ணெயில் தாளித்தால் முட்டைக்கோஸிலிருந்து வரும் வாசனை தெரியாது.

* மோர்க்குழம்புக்கு மசாலா அரைக்கும் போது தேங்காயை கொஞ்சம் குறைத்துக் கொண்டு கசகசா, கடுகு போட்டு அரைத்துக் கலக்கினால் குழம்பு ஒருவித வாசனையுடன் இருக்கும்.

* புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து ஊத்தப்பம் செய்தால் சுவையாகவும், எளிதில் ஜீரணமும் ஆகும்.

– கே.கவிதா, வேலூர்.

*ஒரு வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி இரவு முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை எடுத்து சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் மெதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

* ஏலக்காயை பொடித்து அதன் விதைகளை உபயோகத்திற்கு எடுத்துக்கொண்டு தோலை எறியாமல் குடிக்கும் தண்ணீருடன் சேர்த்தால் தண்ணீர் சுவையாக இருக்கும்.

* கீரையை வேக வைக்கும் போது அதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் சுவையாகவும் நிறம் மாறாமல் இருக்கும்.

* பூண்டு அதிகமாக உரிக்க வேண்டி இருந்தால் அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து உரித்தால் உரிக்க ஈஸியாக வரும்.

– எம்.பவித்ரா, விழுப்புரம்.

*பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

*தோசை மாவு, பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.

*பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும்.

*இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்!

– நாகஜோதி கிருஷ்ணன், சென்னை.

* காரக்குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் போதும். காரத்தின் வீரியம் குறைந்துவிடும்.

* சோறு ஒட்டாமலும் உதிரியாகவும் இருக்க, அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ் கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.

* கறிவேப்பிலை வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரை கெட்டுப் போகாது.

– எம்.ஏ.நிவேதா, திருச்சி.

* சின்ன நெல்லிக்காயை கேரட் துருவலில் சின்னதாகத் துருவிக் கொண்டு, மாங்காய் சாதத்திற்கு தாளிப்பது போல தாளித்து, நெல்லிக்காய் சாதம் தயாரிக்கலாம். தொட்டுக் கொள்ள தேங்காய் துவையல் நன்றாக இருக்கும்.

* இரவில் சாதத்திற்கு தண்ணீர் ஊற்றி வைக்கும் போது சிறிதளவு உப்பையும் போட்டு வைத்தால் காலையில் சாதம் கூழாக கெட்டுப் போகாமல் விறைப்பாக இருக்கும்.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

பலாக்கொட்டை குருமா

தேவையானவை:
பலாக்கொட்டை – 10,
வெங்காயம் – 1,
தக்காளி – 2,
உப்பு – தேவைக்கு,
கடுகு, உளுந்து – 1 ஸ்பூன்,
சீரகத்தூள் – 1 ஸ்பூன்,
தனியா தூள் – 1 ஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்,
பெருங்காயம் – 1/4 ஸ்பூன்,
மிளகாய் – 2,
எண்ணெய் – தாளிக்க,
கறிவேப்பிலை – சிறிது,
பிரிஞ்சி இலை – 1,
பட்டை – 1,
ஏலக்காய் – 2,
கிராம்பு – 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன்.

செய்முறை: பலாக்கொட்டையை தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வேக விட்டு ஆறிய பின் தோல் நீக்கி சிறிதாக நறுக்கி தனியே வைக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மஞ்சள் தூள், தனியாதூள், சீரக தூள், பெருங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் உப்பு, 200 மிலி தண்ணீர், வேக வைத்து பொடியாக நறுக்கிய பலாக்கொட்டை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அடுத்து குருமா பதம் வந்ததும் கொத்தமல்லி, கறிவேப்பிலை இலை தூவி இறக்கினால், பலாக்காய் குருமா தயார். சப்பாத்தி, பூரி, ஆப்பம் போன்ற சிற்றுண்டிகளுக்கு ஏற்ற மாறுபட்ட இணை உணவு. தக்காளி இல்லாமல் தேங்காய் சேர்த்தும் செய்யலாம்.

– சுந்தரி காந்தி, சென்னை.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?