×

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்: அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து 88 பேர் வீடு திரும்பினர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 88 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18ம்தேதி விஷ சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் முண்டியம்பாக்கம், சேலம், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று வரை 63 பேர் பலியானார்கள்.

தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து அடுத்தடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 66 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 12 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேர், புதுவை ஜிப்மரில் 6 பேர், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 88 பேர் சிகிச்சை முடிந்து நேற்று நலமுடன் வீடு திரும்பினர். முன்னதாக சிகிச்சை முடிந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர், குடிப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும், சத்தான உணவுகளை உட்கொண்டு உடல்நலத்தை பேணிக்காக்க வேண்டும்.

குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், மனதை கட்டுப்பாடுடன் வைத்திருக்க வேண்டும், சமுதாயத்தில் நல்ல பழக்க வழக்கங்களுடன் வாழ வேண்டும், குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மது, போதைப்பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதற்கிடையே விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியில் 48 ேபரும், புதுவை ஜிப்மரில் 9 பேரும், சேலத்தில் 18 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் 2 பேரும், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 78 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்: அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து 88 பேர் வீடு திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi poisoned liquor incident ,Kallakurichi ,Kallakurichi Karunapuram ,liquor ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்...