×

சொட்டுநீர் பாசனத்தில் விளைந்த நிலக்கடலை அறுவடை மும்முரம்

வல்லம், ஜூன் 26: தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி பகுதியில் சொட்டு நீர் பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேலும் பல விவசாயிகள் கடலை, கரும்பு, எள், பயறு போன்றவையும் சாகுபடி செய்வது வழக்கம். உலக அளவில் எண்ணை வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் நிலக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவையான எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்வது அத்தியாவசியமாகிறது. மணிலா அல்லது நிலக்கடலை என அழைக்கப்படும் பயிரானது மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். இது பயறு வகை குடும்பத்தை சார்ந்து இருந்தாலும் மற்ற வகை பெயர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.

இது கண்டு பூ பூக்கும். காணாமல் காய் காய்க்கும் அதிசய பயிராகும். சமையல் எண்ணெய் உற்பத்தியிலும் கடலை முக்கிய இடத்தை வகிக்கிறது. கோடைக்கால பயிராக தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது கடலை பருப்பு முதிர்ச்சி அடைந்ததால், நிலக்கடலை செடிகள் அறுவடைப் பணிகள் நடந்து வருகிறது. காலை முதல் மாலை வரை விவசாய பெண் தொழிலாளர்கள் நிலக்கடலை செடிகளை அறுவடை செய்து வருகின்றனர். மதிய வேளையில் களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடிக் கொண்டே அறுவடை செய்து வருகின்றனர்.

The post சொட்டுநீர் பாசனத்தில் விளைந்த நிலக்கடலை அறுவடை மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Vallam ,Chitrakudi ,Thanjavur district ,Taladi ,
× RELATED ஏற்றமிகு வாழ்வருளும் ஏகௌரி அம்மன்