×

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மாடுகளை பிடிக்க தனிக் குழு: நிர்வாக முதன்மை அலுவலர் தகவல்

வளசரவாக்கம், ஜூன் 23: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக என்று அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வரும் காய்கறி, பழக்கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் வளாகத்தின் ஒரு பகுதியில் கொட்டி வைக்கப்படுகின்றன. இவ்வாறு கொட்டபடும் கழிவுப் பொருட்களை சாப்பிட ஏராளமான மாடுகள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட் வளாகத்தில் தஞ்சம் அடைகின்றன. இந்த மாடுகள் அவ்வப்போது பொதுமக்களை விரட்டி முட்டும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
மேலும், காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்களுக்கும், உணவுப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. மாடுகள் முட்டி ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனர். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள், அங்காடி நிர்வாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மாடுகள் சுற்றித் திரிவதை தடுக்கும் வகையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் 200க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு இதுவரை ₹4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி மார்க்கெட் வளாகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மார்க்கெட் ஊழியர்கள் மாடுகளைப் பிடித்து கட்டி வைத்தனர். மாடுகளைத் தேடி வந்த உரிமையாளர்களிடமிருந்து ஒரு மாட்டிற்கு தலா ₹2 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது, மாடுகளை கட்டி வைத்து பராமரிக்க வேண்டும் என்று மாடுகளின் உரிமையாளர்களுக்கு அங்காடி முதன்மை அலுவலர் இந்துமதி அறுவுறுத்தினார். மேலும், மார்க்கெட் வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்க தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் வளாகத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு பொது ஏலம் விடப்படும் என்று எச்சரித்தார்.

The post கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மாடுகளை பிடிக்க தனிக் குழு: நிர்வாக முதன்மை அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Valasaravakkam ,Chief Administrative Officer ,Indumati ,Koyambedu market ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில்...