×

கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி 52 பேர் உயிரிழப்பு ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்கியது  முழுமையான அறிக்கை முதல்வரிடம் வழங்கப்படும்  ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் பேட்டி

கள்ளக்குறிச்சி, ஜூன். 22: கள்ளக்குறிச்சி விஷசாராய உயிரிழப்பு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஒரு நபர் ஆணையம் நேற்று விசாரணையை தொடங்கியது. அப்போது 3 மாதம் அவகாசம் இருப்பதாகவும் முழுமையான அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தியதில் 150 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் நேற்று மாலை வரை 52 பேர் உயிரிழந்த நிலையில் 80க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை உலுக்கிய இந்த கள்ளச்சாராய உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி, உரிய சிகிச்சை அளிக்கவும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து, விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் உதவியும், மேலும் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும், அவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையையும் அறிவித்துள்ளார். மேலும் கள்ளச் சாராய வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும் தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதேபோல் மற்றொரு பக்கம் விஷசாராயம் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்திட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கொண்ட ஒரு நபர் ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த ஆணையம் முழுமையாக விசாரணை நடத்தி 3 மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்கவும் அதன்பிறகு தமிழக அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சரின் உத்தரவின்படி அன்றைய தினமே சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட சாராய வியாபாரிகள் மீது வழக்குபதிவு செய்து 7 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே விஷசாராய உயிரிழப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேற்று கள்ளக்குறிச்சியில் விசாரணையை தொடங்கினார்.

முதல் கட்டமாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த், எஸ்பி சதுர்வேதி மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை எடுத்த நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். அதேபோல் தற்போது கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் விவரங்களும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் விவரங்களையும் கேட்டறிந்தார்.

ஆணையத்தின் கேள்விகளுக்கு கலெக்டர், எஸ்பி மற்றும் துறை அதிகாரிகள் தெரிவித்த பதில்களை ஓய்வு பெற்ற நீதிபதி பதிவுசெய்து கொண்டார். பின்னர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை முடித்துக் கொண்ட ஆணைய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் சாராய விற்பனை நடைபெற்ற கருணாபுரம் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் விரிவாக கேட்டறிந்த கோகுல்தாஸ் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினார்.

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களிடமும், மருத்துவ குழுவினரிடமும் விசாரணை மேற்கொண்ட கோகுல்தாஸ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தேன். அதேபோன்று கிராமத்தில் இருப்பவர்களையும் சந்தித்தேன். ஆணையம் எடுத்து வரக்கூடிய நடவடிக்கை தொடர்பாக செய்திக்குறிப்பாக விரைவில் தெரிவிக்கப்படும். தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்ததில் 3 மாதம் அவகாசம் இருக்கிறது. முழுமையாக அறிக்கை தயாரிக்கப்பட்டு முதலமைச்சரிடம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையம் தனது விசாரணையை தொடங்கியிருப்பதால் விரைவில் இதன் பின்னணி குறித்த முழு உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி 52 பேர் உயிரிழப்பு ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்கியது  முழுமையான அறிக்கை முதல்வரிடம் வழங்கப்படும்  ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,commission ,Chief Minister ,Justice ,Gokuldas ,Vishasaraya ,Karunapuram… ,One ,
× RELATED கள்ளக்குறிச்சி நிகழ்வு...