×

விஷ சாராயம் விஷயத்தில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சம் இன்றி கைது செய்ய வேண்டும் திருமாவளவன் பேட்டி

கள்ளக்குறிச்சி, ஜூன் 22: விஷசாராயம் விற்ற அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும் என திருமாவளவன் எம்பி கூறினார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி ரூ.10,000 நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார். ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று அவர்களுடன் உட்கார்ந்து நடந்த சம்பவத்தை கேட்டு அறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களை இரண்டாவது நாளாக சந்தித்து ஆறுதல் கூறி வருகிறேன். கருணாபுரம் பகுதி கண்ணீருடன் காட்சியளிக்கிறது. எல்லோரும் ஒருமித்த கருத்தாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கூறுகின்றனர்.

இதனை நீங்கள் முதல்வரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பெரும் துயரத்துக்கு பின்னால் இருக்கும் மெத்தனால் மாபியா கும்பலை கைது செய்ய வேண்டும். கடும் விதிமுறைகளுக்கு உட்பட்டு மெத்தனால் இருந்தாலும் இதனை கள்ள சந்தையில் தமிழ்நாடு முழுவதும் புழக்கத்தில் விடும் பின்னணியில் பெரும் மாபியா கும்பல் உள்ளதாக தெரிகிறது. இந்த ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் புலன் விசாரணை நடத்தாமல் மாபியா கும்பல் குறித்து உரிய விசாரணை செய்து கைது செய்ய வேண்டும். கருணாபுரம் விஷ சாராயம் உயிரிழப்பு தொடர்பாக எந்த அரசியல் கட்சியின் தொடர்பு இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். விஷ சாராயம் தொடர்பாக தொடர்புடைய அனைவரையும் பாரபட்சம் இன்றி கைது செய்ய வேண்டும், என்றார். நிர்வாகிகள் தமிழ்மாறன், பழனியம்மாள், அறிவுக்கரசு, திராவிட மணி, மதியழகன், பாசறை பாலு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post விஷ சாராயம் விஷயத்தில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சம் இன்றி கைது செய்ய வேண்டும் திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Kallakurichi ,Kallakurichi Karunapuram ,
× RELATED கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் திருமாவளவன் ஆறுதல்..!!