×

விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கற்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் கள்ளச்சாரயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயத்தால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காவல் துறையின் சில கருப்பு ஆடுகளால் மதுவினால் அதிகரிக்கும் சமூக குற்றங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதும் வேதனை தருகிறது. மது இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும். முழு மதுவிலக்கே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று மதிமுக தொடர்ந்து போராடி வருகிறது.

கள்ளச்சாரய மரணங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன். உயிர் இழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றுமாறு மருத்துவத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

The post விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : VIGO ,Chennai ,Secretary General ,Wiko ,Kalalakurichi district, Karunapuram ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்...