×

இந்தியாவில் தனி நபர்கள் அதிக செலவு செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் : புள்ளி விவரங்களில் அம்பலம்

சென்னை : இந்தியாவில் தனி நபர்கள் அதிக செலவு செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் செலவிடும் தொகையின் வித்தியாசம் தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் மிக குறைவாக உள்ளது.2022-2023 நிதியாண்டில் வீட்டு நிர்வாக நுகர்வுச் செலவுகள் தொடர்பாக ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி , தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் தனி நபர் மாதாந்திர செலவினம் ரூ.7,630 ஆகவும் கிராமப்புறங்களில் ரூ.5,310 ஆகவும் அதிகரித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புற – கிராமப்புற தனி நபர் செலவின வித்தியாசம் 44%ஆக உள்ளது. இது தேசிய சராசரியான 71% விட மிகவும் குறைவானதாகும்.

பரவல் ஆக்கப்பட்ட வளர்ச்சியை இலக்காக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களே இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தனி நபர் செலவிடும் பட்டியலில் முன்னிலையில் உள்ள தமிழ்நாடு, பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்காக அதிகம் செலவிடும் மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. கிராமங்களில் 28.4%மும் நகர்ப்புறங்களில் 33.7%மும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனி நபர் மொத்த செலவீனங்களை பொறுத்தவரை நகர மற்றும் கிராமங்களில் உணவு அல்லாத பொருட்களின் பங்கு, அதிகமாக இருக்கிறது. ஆடைகள், அணிகலன்களுக்கு கிராமங்களில் 9.3%மும் நகரங்களில் 7.1%மும் செலவிடப்பட்டுள்ளது. போக்குவரத்திற்காக கிராமப்புறங்களில் 18%மும் நகரங்களில் 16.1%மும் செலவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக கிராமப்புறங்களில் 14.9% செலவிடப்படும் நிலையில், நகர்ப்புறங்களில் 11.1% மட்டுமே செலவிடப்படுகிறது. அதே நேரத்தில் கல்விக்காக கிராமப்புறங்களில் 6.1% செலவிடப்பட்ட நிலையில், நகர்ப்புறங்களில் 8.5% செலவு செய்யப்பட்டுள்ளது. எரிபொருள், மருத்துவ தேவைகளுக்கு கிராம மக்கள், தனி நபர் வருமானத்தில் இருந்து 9.2%,11.6% செலவு செய்துள்ளனர். இதே தேவைகளுக்கு நகர்ப்புற மக்கள் செலவிட்டது 7.9% மற்றும் 9.6% ஆகும். இது தவிர பொழுதுபோக்கிற்காக கிராமப்புறங்களில் 12.1% செலவிடப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புற மக்கள் 11.2% செலவிட்டுள்ளனர். உணவு அல்லாத பொருட்களுக்கான செலவுகளை பொறுத்தவரை நகர்ப்புறத்தை விட கிராமப்புற பகுதிகளில் செலவினம் அதிகரித்துள்ளது.

The post இந்தியாவில் தனி நபர்கள் அதிக செலவு செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் : புள்ளி விவரங்களில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Ambalam ,Chennai ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...