×

கனமழையால் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு கூடலூரில் 30 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

கூடலூர்: கூடலூரில் பெய்த கன மழையால் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் நேற்று மாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் விட்டு விட்டு கன மழையாக பெய்தது.

இதனால், கூடலூர் பகுதிகளில் ஓடும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான இடங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது. கூடலூரை அடுத்த பாடந்துறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக அவ்வழியாக ஓடும் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் புகுந்தது. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த ஷோபா, கட்டில், மெத்தை உள்ளிட்ட உபயோக பொருட்கள் சேதமடைந்தது. நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

சிற்றாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதால் கடந்த 2 வருடங்களுக்கு முன் தூர்வாரப்பட்டது. ஆனால் மழை இல்லாததால் தூர்வாரப்பட்ட ஆற்றில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்பட்டதால் மழைநீர் வேகமாக செல்ல முடியாததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி ஊருக்குள் புகுந்ததாகவும், ஆற்றில் உள்ள செடி, கொடிகள் மற்றும் புதர்களை அகற்றி சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மழையால் விவசாய பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை தோட்டக்கலை துறையினர் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கனமழையால் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு கூடலூரில் 30 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது appeared first on Dinakaran.

Tags : Koodalur ,Sidra ,SIRTHARI ,Nilagiri District Koodalur ,Bandhalur ,Dinakaran ,
× RELATED கூடலூரில் கனமழையால் வீடுகளை இழந்த 36...