×

300 வகை மாம்பழங்கள், 100 வகை பலா மற்றும் வாழைப்பழ கண்காட்சி! காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழாவில் ஏற்பாடு

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் “உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா” எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 23-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

காவேரி கூக்குரல் இயக்கம், இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) ஆகிய 4 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. இதில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், பண்ருட்டி முன்னாள் வேளாண்மை துணை இயக்குனர் அக்ரி.பி. ஹரிதாஸ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இதில் தமிழ்மாறன் பேசியதாவது, “பருவ நிலை மாற்றத்தால் முக்கனி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். வழக்கத்தை விட மா, பலா, வாழையின் உற்பத்தி கடந்த ஆண்டை விட 30% இந்தாண்டு குறைந்துள்ளது. ஒருப்பயிர் சாகுபடியை விடுத்து, பலப்பயிர் பல அடுக்கு முறையில் உணவுக்காடாக உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளை பாதிப்பிலிருந்து காக்கலாம்.

சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாற்றம் இதை சீர்ப்படுத்த மரம் வளர்ப்பு தேவையாகிறது. அதுவும் குறிப்பாக பழ மரமாக இருந்தால் நம் ஆரோக்கியம் மேம்படும், சுற்றுச்சுழல் மேம்படும், நிலம் வளமாகும் மேலும் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். இத்தோடு விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும். எனவே, விவசாயிகள் தங்களிடம் எவ்வளவு நிலம் இருந்தாலும் அதில் ஒரு சிறு பகுதியில் உணவுக்காடு உற்பத்தி செய்ய வேண்டும். நிலமே இல்லாவிட்டாலும் மாடியில் கூட உணவுக்காடு சாத்தியம் என்பதை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.

அந்த வகையில் விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் உணவுக்காடு வளர்ப்பு எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கையும், பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் முக்கனி திருவிழாவையும் நடத்துகிறோம். இந்த நிகழ்ச்சியில் கேரளா, மகாராஷ்ட்ரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 7 மாநில முன்னோடி விவசாயிகள் மற்றும் வல்லுநர்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர உள்ளனர்.

மேலும் சித்த மருத்துவர் Dr.கு. சிவராமன், தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் Dr.ஆர்.செல்வராஜன், பெங்களூர் IIHR -இன் முதன்மை விஞ்ஞானி Dr.ஜி. கருணாகரன், பண்ருட்டி முன்னாள் வேளாண்மை துணை இயக்குனர் அக்ரி.பி. ஹரிதாஸ், இயற்கை மருத்துவர் கோ. சித்தர் & சூழலியலாளர் ஏங்கல்ஸ் ராஜா உள்ளிட்ட பல வல்லுநர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு காணொளி மூலமும், நேரிலும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா பழங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வாழை ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைகாகவும் வைக்கப்பட உள்ளது. இத்துடன் முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90081, 94425 90079 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்” இவ்வாறு தமிழ்மாறன் அவர்கள் கூறினார்.

The post 300 வகை மாம்பழங்கள், 100 வகை பலா மற்றும் வாழைப்பழ கண்காட்சி! காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழாவில் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Kaveri ,Mukani festival ,Food Forest Cultivation & Great Mukani Festival ,Kaveri Kurkural Movement ,Pushkaram College of ,Agricultural ,Sciences ,Thiruvarangulam, Pudukottai ,Kaveri Kukkural ,Food Forest ,
× RELATED காவேரி கூக்குரலின் உணவுக்காடு...