×

மெக்காவில் வீசும் வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம்!

மெக்கா: மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம்.

மேலும் இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது. ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டில் சவுதி அரேபியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. மெக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், புனித பயணம் மேற்கொள்பவர்கள், அதிக வெப்ப சூழலில் நீர்ச்சத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். வெப்ப தாக்கத்தினை எதிர்கொள்ள கூடிய வகையிலான மருத்துவ குழுவினர் உள்பட 1,600 ராணுவ வீரர்களை சவுதி ராணுவம் அனுப்பியுள்ளது. இதேபோன்று, 30 அதிரடி விரைவு குழுவினரும், 5 ஆயிரம் சுகாதார மற்றும் முதலுதவி தன்னார்வலர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இருப்பினும் ஹஜ் பயணத்தின் போது குறைந்தது 550 பயணிகள் இறந்ததாக பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குறைந்தது 323 பேர் எகிப்தியர்கள், அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஜெட்டாவில் உள்ள சவுதி அதிகாரிகளிடம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அவர்களின் உடல்களை ஜோர்டானுக்கு திரும்ப கொண்டு வருவதற்கான பணிகளை ஜோர்டான் மேற்கொண்டு வருகிறது.

The post மெக்காவில் வீசும் வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம்! appeared first on Dinakaran.

Tags : Hajj ,Mecca ,Bakrit ,Islamists ,Eid Thiruana ,
× RELATED தியாகத்திற்கு ஒரு திருநாள்…!