×

அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை ஜூலை 22ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததா கடந்த 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீதான வழக்குகள் இறுதி விசாரணை நடந்து வருவதால் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று தெரிவித்தார். இதேபோல 2001-06ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2வது வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

The post அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Vakramathi ,Madras High Court ,Chennai ,Varamathi ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...