×

நீட் தேர்வில் சிறு தவறு நடந்தாலும் கடும் நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: நீட் தேர்வை நடத்துவதில் 0.001 சதவீதம் அளவுக்கு கூட அலட்சியம் இருக்கக் கூடாது. இந்த தேர்வில் சிறு தவறு நடந்தாலும் கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டு, இம்மாதம் 4ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன.

முதலில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 16) செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நடப்பாண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உண்மைதான்” என ஒத்து கொண்டார். இந்த நிலையில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “நீட் தேர்வு விவகாரத்தில் 0.001சதவீதம் அலட்சியம் நடந்திருந்தால் கூட அதனையும் கண்டிப்பாக ஆராய வேண்டியுள்ளது.ஒரு தனிநபரால் ஒட்டுமொத்த அமைப்பும் ஆபத்தானதாக மாறும் சூழல் குறித்தும் யோசிக்க வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் துரிதமாக செயல்படும். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.  குறிப்பாக நீட் தேர்வு முறைகேடு மூலம் ஒருவர் மருத்துவராக தேர்வானால் அவர் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அச்சுறுத்தல் என்பதோடு மட்டுமில்லாமல் ஆபத்தானவராகவும் கருதப்படுவார்.

எனவே இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைகள் விரைவாக தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வில் சிறு தவறு, முறைகேடுகள் நடந்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அகர்வால், “நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்துவதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது.

ஆனால் இந்த விவகாரத்தில் மாணவர்கள் வெளியேபடும் சிரமங்கள் குறித்து நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்தனர். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முன்னதாக இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன், இந்த புதிய மனுவும் ஜூலை 8ம் தேதி பட்டியலிட்டு விசாரிக்கப்படும். இருப்பினும் இந்த புதிய மனுவுக்கும் ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

The post நீட் தேர்வில் சிறு தவறு நடந்தாலும் கடும் நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...