×

மாணவர்களுக்கு நெடுஞ்சாலையில் பயிற்சி ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது: 4 பிரிவில் வழக்கு

சேலம்: சேலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வகையில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஸ்கேட்டிங் பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (29). இவர் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பள்ளி மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சியை பனமரத்துப்பட்டி பிரிவு கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இருந்து ஆண்டகளூர் கேட் வரை நடத்தினார்.

இதில், 13 மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். சுமார் 25 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ளப்பட்ட இப்பயிற்சி, தேசிய நெடுஞ்சாலையிலேயே நடந்தது. அப்போது லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. மாணவர்களது பெற்றோருடன் உடன் டூவீலரில் வந்தனர். இதனால் சாலை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது. இதனிடையே தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதை பார்த்தவர்கள் பயிற்சியாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே மாவட்ட எஸ்பி அருண்கபிலன் உத்தரவின் பேரில் மல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அஜாக்கிரதையாக செயல்படுதல், வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சிறார்களுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று மதியம் பயிற்சியாளர் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

The post மாணவர்களுக்கு நெடுஞ்சாலையில் பயிற்சி ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது: 4 பிரிவில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Salem ,Prabhakaran ,Kumaramangalam ,Thiruchengottai ,Namakkal district ,Kannangurichi ,Dinakaran ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு