×

2 நாளில் ஆளை கொல்லும் ஜப்பானில் பரவும் தசையைத் தின்னும் பாக்டீரியா

டோக்கியோ: ஜப்பானில் தசையைத் தின்று 2 நாள்களில் உயிரைக் கொல்லும் பாக்டீரியா வேகமாக பரவி வருகிறது. இந்த பாக்டீரியாவால் கடந்த 2ம் தேதி முதல் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு ‘ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம்’ (எஸ்டிஎஸ்எஸ்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டோக்கியோ பெண்கள் மருத்துவ பல்கலைக் கழக பேராசிரியர் கென் கிகுச்சி கூறுகையில், ‘ஜப்பானில் தசையைத் தின்னும் புதிய வகை பாக்டீரியா பரவி வருகிறது. இந்நோய் பரவ ஆரம்பித்த இரண்டு நாள்களில் உயிரைக் கொல்லும் அபாயம் கொண்டது. இதுவரை 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி முதல் மார்ச் வரை 77 பேர் இந்நோயால் இறந்துள்ளனர். கடந்தாண்டு 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட கூடுதலாக பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், தீவிர மூச்சுப் பிரச்னை, திசு செயலிழப்பு, உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது.

காலையில் ஒரு நோயாளி பாதத்தில் வீக்கம் இருப்பதை உணர்ந்தால், மதியத்துக்குள் முட்டி வரை பரவுகிறது. மேலும், 18 மணிநேரத்தில் இறக்கவும் நேரிடுகிறது. இந்த ஆண்டு 2,500 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்படலாம்.
இந்நோயால் 30 சதவீத இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். புண்களை பாதுகாப்புடன் கையாள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் குடலில் இருக்கலாம். மலம் கழிக்கும்போது அவை கைகள் மூலம் பரவ வாய்ப்புள்ளது. ஜப்பான் மட்டுமின்றி 2022ம் ஆண்டின் இறுதியிலிருந்து ஐரோப்பாவின் 5 நாடுகளிலும் ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது’ என்றார்.

The post 2 நாளில் ஆளை கொல்லும் ஜப்பானில் பரவும் தசையைத் தின்னும் பாக்டீரியா appeared first on Dinakaran.

Tags : Japan ,TOKYO ,
× RELATED செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான்...