×

நடப்பாண்டு நீட் தேர்வில் பாஜ ஆளும் மாநிலங்களில்தான் திட்டமிட்ட முறைகேடுகள் நடந்துள்ளன: ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: பாஜ ஆளும் மாநிலங்களில்தான் நீட் தேர்வு முறைகேடுகள் திட்டமிட்டு அரங்கேறி உள்ளதாக ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடந்த நிலையில், இம்மாதம் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ராகுல் காந்தி தன் ட்விட்டர் பதிவில், “நடப்பாண்டு நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. பாஜ ஆட்சி செய்யும் பீகார், அரியானா, குஜராத் மாநிலங்களில்தான் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகள் திட்டமிட்டு நடந்துள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நடப்பாண்டு நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆனால் இந்த முறைகேடுகள் பற்றி பிரதமர் மோடி எதையும் பேசாமல் வழக்கம்போல் வாய் மூடி மவுனம் காக்கிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “மக்களவை தேர்தல் அறிக்கையில் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் அரசு தேர்வுகளில் வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம் என காங்கிரஸ் உறுதி அளித்திருந்தது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அந்த பொறுப்பை நிறைவேற்றும். இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வீதி முதல் நாடாளுமன்றம் வரை குரல் எழுப்பி வினாத்தாள் கசிவை தடுக்க உறுதியான சட்டங்களை இயற்ற ஒன்றிய பாஜ அரசுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் உறுதிப்பூண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

The post நடப்பாண்டு நீட் தேர்வில் பாஜ ஆளும் மாநிலங்களில்தான் திட்டமிட்ட முறைகேடுகள் நடந்துள்ளன: ராகுல் காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : NEET ,BJP ,Rahul Gandhi ,New Delhi ,
× RELATED நீட் விடைத்தாள் கிழிந்ததாக புகார்...