×

நள்ளிரவில் மதுபோதையில் ரகளை ரவுடி சரமாரியாக வெட்டி கொலை: 5 பேர் கைது

ஆவடி: திருமுல்லைவாயலில் நள்ளிரவில் மதுபோதையில் இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் புதிய அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம்(31). மீனவர். இவரது வீடு ஏரிக்கரை பகுதியில் உள்ளது. சதாசிவத்தின் தாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திருவேற்காடு கோலடி பகுதியை சேர்ந்த ரவுடி கணேஷ்(24) மற்றும் புதிய அண்ணாநகர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த பாலமுருகன் (எ) வினோத்(22), கார்த்திகேயன்(20) ஆகியோர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஏரிக்கரை பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, போதை தலைக்கு ஏறியதும் ரவுடி உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து அதிகமாக சத்தம் எழுப்பி கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். எனவே, சதாசிவம் குடிபோதையில் இருந்தவர்ளை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் உள்ளிட்ட 3 பேரும் சதாசிவத்தை திடீரென சரமாரியாக தாக்கினர். இதில், சதாசிவத்தின் அலறல் சத்ததை கேட்டதும் அவரது உறவினர்களான அன்பழகன்(37), வேலு(36), செல்வம்(40), பாலகிருஷ்ணன்(65), பீட்டர்(44) ஆகியோரும் சம்பவ இடத்திற்கு அவர்களும் விரைந்து வந்த அவர்களும் தட்டி கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சதாசிவம் கோஷ்டியினர், கணேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த ரவுடி கணேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்த கோஷ்டி மோதலில் சதாசிவத்தின் கோஷ்டியான செல்வம், பீட்டர் ஆகியோரும் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து கார்த்திகேயன் மற்றும் வேலு, செல்வம், பாலகிருஷ்ணன், அன்பழகன் ஆகிய 5 பேரையும் நேற்று அதிகாலை செய்தனர். மேலும், தலைமறைவான பாலமுருகன் (எ) வினோத் என்பவரை தேடி வருகின்றனர். கோஷ்டி மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post நள்ளிரவில் மதுபோதையில் ரகளை ரவுடி சரமாரியாக வெட்டி கொலை: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Tirumullaivayal ,Sathasivam ,Annanagar ,Fisherman ,Rao ,Dinakaran ,
× RELATED பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர்...