×

கூடுவாஞ்சேரியில் உள்ள பெரிய ஏரி புனரமைப்பு பணியில் முறைகேடு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் உள்ள பெரிய ஏரியில் ₹6.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணியில் பயங்கர முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணியில் பயங்கர முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், ‘நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட ரயில் நிலையம் அருகில் உள்ள கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் சமீபத்தில் தமிழக அரசின் நிதியிலிருந்து ₹6.50 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பணிகள் அனைத்தும் தற்போது முழுமை அடையாமல் பாதியிலேயே உள்ளது. சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அப்பணிகள் செய்த ஒப்பந்ததாரரிடம் ஏன் பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது என கேட்டதற்கு, பணிகள் முழுவதும் முடிந்துவிட்டது என பதிலளித்துள்ளனர். ஏரியினை சுற்றி பேவர் பிளாக் சாலை உட்புறமாக அமைக்கப்பட்டது, மேல் பகுதியில் மண்கொட்டி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதில், நடைபாதை அமைக்கவோ அல்லது நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பேவர் பிளாக் சாலை அமைக்கவோ இல்லை. இதனால், பலத்த மழை பெய்யும்போது முழுவதுமாக மண்சரிவு ஏற்பட்டு அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், ஏரியின் நடுப்பகுதியில் உள்ள கழிவுநீர், மண் மற்றும் சேறும், சகதிகள் யாவும் சரியாக தூர்வாராமல் பாதியிலேயே விடப்பட்டுள்ளது. இதனால், மழைநீர் சேகரிப்பது மிகவும் கடினமாகும். மேலும், அருகிலுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற இடங்களில் அமைந்துள்ள ஏரி, குளங்கள் மிகவும் அழகான முறையில் தூர்வாரி, ஆழப்படுத்தி, கரை அமைத்து அதில் முதியவர்கள், நோயாளிகள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் சாலை அமைத்து, தெருமின்விளக்கு வசதிகள் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே, சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹6.50 கோடி மதிப்பில் முழுவதுமாக பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

The post கூடுவாஞ்சேரியில் உள்ள பெரிய ஏரி புனரமைப்பு பணியில் முறைகேடு appeared first on Dinakaran.

Tags : Periya ,Kuduvanchery ,Guduvanchery ,Periya Lake ,Nandivaram-Kooduvancheri ,Chengalpattu ,Kuduvancheri ,
× RELATED பெரிய வாளவாடியில் ஜமாபந்தி அதிகாரிகள் வராததால் மக்கள் ஏமாற்றம்