×

பொது வினியோக திட்ட கொள்முதலில் மசூர் பருப்பை சேர்க்காததை எதிர்த்த வழக்கு தமிழக மக்கள் மசூர் பருப்பைவிட துவரம் பருப்பையே விரும்புகிறார்கள்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: மசூர் பருப்பை (சிவப்பு நிற துவரம் பருப்பு) குறைந்த விலையில் மாநிலங்களுக்கு விற்பனை செய்யவுள்ளதாகவும் அதை அந்தந்த மாநிலங்கள் பொது வினியோக திட்டத்தில் வினியோகிக்கலாம் என்றும் மத்திய உணவுத் துறை அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் பொது வினியோக திட்டத்திற்கான இ-டெண்டரில் தமிழக அரசு மசூர் பருப்பை சேர்க்கவில்லை என்று கூறி தனியார் பருப்பு மொத்த விற்பனை நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மனுவில், மசூர் பருப்பை போல் கேசரி பருப்பும் இருப்பதால் மசூர் பருப்பில் கலப்படம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மசூர் பருப்பை கொள்முதல் செய்யும் அறிவிப்பாணையை தமிழக அரசு கடந்த 2007ல் திரும்ப பெற்றது. பின்னர் மசூர் பருப்பின் சத்துக்களை கருத்தில்கொண்டு மீண்டும் 2017ல் கொள்முதல் பட்டியலில் மசூர் பருப்பை அரசு சேர்த்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி அரசு வெளியிட்ட இ-டெண்டர் அறிவிப்பில் மசூர் பருப்பு சேர்க்கப்படவில்லை. இதை எதிர்த்து எங்கள் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எனது மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், இதற்கு முன்பு கேசரி பருப்பு மசூர் பருப்பில் கலப்படம் செய்யப்பட்டு அதனால் ஏற்பட்ட பாதிப்பை காரணம்காட்டி எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால், கடந்த 1961லேயே கேசரி பருப்பு தடை செய்யப்பட்டதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவில்லை. இந்த நிலையில், 20 ஆயிரம் மெட்ரிக் டன் கனடியன் மஞ்சள் கலர் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய கடந்த மாதம் 27ம் தேதி அரசு இ-டெண்டர் கோரியது.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ஜூன் 13ம் தேதி கனடியன் மஞ்சள் நிற பருப்பை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு அரசு ஆர்டர் கொடுத்து உத்தரவு பிறப்பித்தது. இந்த பருப்பு விலை அதிகம். மசூர் பருப்பு விலை அதைவிட குறைவு. மசூர் பருப்ைப கொள்முதல் செய்து மக்களுக்கு சப்ளை செய்தால் பொதுமக்களின் பணம் சேமிப்பாகும். எனவே, கடந்த 13ம் தேதியிட்ட டெண்டரை உறுதி செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுத்துள்ளது. மசூர் பருப்பில் கூடுதல் ஊட்டச்சத்து உள்ளது. மசூர் பருப்பை கொள்முதல் செய்யாததற்கான காரணத்தை தமிழக அரசு தெரிவிக்கவில்லை. இந்தியாவில், உ.பி, ம.பி, பிஹார், மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மசூர் பருப்பு ஆண்டுக்கு 10 லட்சம் டன் விளைகிறது.

விலை குறைந்த இந்த பருப்பை வாங்கினால் தமிழக அரசுக்கு மாதத்திற்கு ரூ.150 கோடி மிச்சமாகும் என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதிடும்போது, தமிழக மக்கள் மசூர் பருப்பைவிட துவரம் பருப்பையே அதிகம் விரும்புகிறார்கள். அதனால்தான் பொது வினியோகத்திற்காக விவசாயிகளிடம் இருந்து துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால்தான் மசூர் பருப்பை கொள்முதல் டெண்டரில் சேர்க்கவில்லை. அதே நேரத்தில் மசூர் பருப்புக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மசூர் பருப்பு கொள்முதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அந்த பருப்பை மறுக்கவும் இல்லை. எதிர் காலத்தில் தேவை ஏற்பட்டால் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் பொது வினியோக திட்டத்தில் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து 2 வாரங்களில் அரசிடம் கேட்டு தெரிவிக்குமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

The post பொது வினியோக திட்ட கொள்முதலில் மசூர் பருப்பை சேர்க்காததை எதிர்த்த வழக்கு தமிழக மக்கள் மசூர் பருப்பைவிட துவரம் பருப்பையே விரும்புகிறார்கள்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Tamilnadu govt ,iCourt. ,CHENNAI ,Central Food Department ,Dinakaran ,
× RELATED வெளிமாநில பதிவெண் கொண்டு...