×

2026 சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் மேல் தொகுதிகளை கைப்பற்றுவதே நமது இலக்கு: திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

கோவை: ‘2026 சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றுவதே நமது இலக்கு’ என்றுதிமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தற்போது நடந்து முடிந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்று, வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முழு காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விழா மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் நேற்று நடந்தது.

இவ்விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற 40 எம்பிக்களும் கலந்து கொண்டனர். இதில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கோவைக்கு கடந்த முறை வந்ததை நினைத்துப் பார்க்கிறேன். தேர்தல் பரப்புரைக்காக வந்த போது எவ்வளவு சிறப்பாகக் கூட்டம் நடைபெற்றதோ அதைவிடச் சிறப்பான வெற்றியையும் கொடுத்து மிகப்பிரமாண்டமாக இந்த வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த முறை இங்கே நான் கலந்து கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து Close’ செய்துவிட்டார். சகோதரர் ராகுலின் அந்த அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ந்த வெற்றிவிழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கு நடைபெறும் பாராட்டு விழா அல்ல, இந்த மேடையில் இருக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது. இந்தியா கூட்டணி தொண்டர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது. இது சாதாரண வெற்றி இல்லை, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. நம்முடைய அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்களே தமிழ்நாட்டு மக்களுக்கான வெற்றி. புதிய வரலாற்றைப் படைப்பதற்கான வெற்றி.

2004ல் நாம் 40க்கு 40 வெற்றி பெற்றபோது ஆளும் அதிமுக மீதான அதிருப்தியில் பெற்ற வெற்றி என்று சிலர் சொன்னார்கள் அது அதிருப்தி என்றால், 2024ல் பெற்றிருக்கின்ற 40க்கு 40 வெற்றி, நம்முடைய திராவிட மாடல் அரசு மேல், மக்களுக்கு இருக்கிற திருப்தியில் கிடைத்திருக்கின்ற வெற்றி. நம்முடைய தொடர் வெற்றிக்குக் காரணம் என்ன, கொள்கை உறவோடு கடந்த ஐந்து தேர்தல்களாகத் தமிழ்நாட்டில் தொடருகின்ற நம்முடைய கூட்டணி ஒற்றுமைதான். இந்த மேடையில் இருக்கின்ற தலைவர்களுக்கிடையில் இருப்பது வெறும் தேர்தல் உறவு கிடையாது; கொள்கை உறவு.

இங்கே மட்டுமில்லை, 2023ல் நடைபெற்ற என்னுடைய பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்திலேயே அகில இந்திய தலைவர்கள் அருகில் வைத்துக் கொண்டே “காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது” என்று மேடையில் அறிவித்தேன். அதனுடைய விளைவாகத்தான், 28 கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியை உருவாக்கினோம். உடனே இந்த கூட்டணி ஒன்று சேரக் கூடாது என்று என்னவெல்லாம் செய்தார்கள் . ஒவ்வொரு கட்சிகளையும் ஐ.டி, இ.டி, சி.பி.ஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டினார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வங்கிக் கணக்கை முடக்கினார்கள். டெல்லி முதலமைச்சரையும், ஜார்க்கண்ட் முதலமைச்சரையும் கைது செய்தார்கள். அதுமட்டுமல்ல, தேர்தல் அறிவித்த பிறகு மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவது போன்று பாஜவினர் தேர்தல் பிரசாரம் செய்தார்கள். சிறுபான்மைச் சமூகத்தினரைத் தரக்குறைவாகப் பேசினார்கள். உத்திரபிரதேசத்திலும், ஒடிசாவிலும் தமிழர்களைக் கொச்சைப்படுத்தினார்கள்.

ஏராளமான போலிச் செய்திகளையும், அவதூறுகளையும் பல கோடி ரூபாய் செலவில் வாட்ஸ் ஆப்பில் பரப்பினார்கள். இவ்வளவு செய்தும், பாஜ வாங்கியது எவ்வளவு? 240 தான் இந்த 240 என்பது, மோடியின் வெற்றி இல்லை மோடியின் தோல்வி. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு தந்திருக்காவிட்டால் மெஜாரிட்டி ஏது அவர்களால் தான் மோடி இப்போது பிரதமராக உட்கார்ந்திருக்கிறார். நாம் நம்பிய அரசியல் சட்டமும், ஜனநாயகமும் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது.

பா.ஜ.க.வுக்கு அதிகப் பெரும்பான்மை இருந்தபோதே, தங்களுடைய வாதங்களால் நாடாளுமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நம்முடைய தமிழ்நாட்டு எம்.பி.க்கள். இப்போது மைனாரிட்டி பாஜக அரசு இருக்கும்போது அடங்கிப் போவார்களா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றிவிட வேண்டும் என்று துடிக்கின்ற பாஜவை தடுக்கின்ற காவல் அரணாக நம்முடைய 40 எம்.பி.க்களும் இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, இன்னும் 24 அமாவாசைதான் இருக்கிறது என்று உளறிக்கொண்டு இருந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சிதம்பரம் கூட்டத்தில் ஒன்றைச் சொன்னேன். “சட்டமன்றத் தேர்தல் வரட்டும். அ.தி.மு.கவிடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே திமுக பறிக்கும். இது உறுதி. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த, செய்ய இருக்கிற நன்மைகள் மேல் நம்பிக்கை வைத்துச் சொல்கிறேன்” என்று சிதம்பரத்தில் பேசினேன்.

பழனிசாமி அவர்களே இப்போது 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகத்தான் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதன்படி பார்த்தால், தி.மு.க. கூட்டணி 221 இடங்களில் முன்னிலை வகித்திருக்கிறது. அடுத்து, இன்னும் சிறிது நாட்களில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தலிலும், நம்முடைய கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாதான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார். தொடர் வெற்றியால் எனக்கு மமதை வந்துவிடவில்லை.

ஆணவம் ஏற்படவில்லை, மாறாக எனக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. நம்முடைய உழைப்பு வீண் போகவில்லை என்ற மனநிறைவைக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக இன்னும் இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு நான் அளிக்கின்ற உறுதிமொழி என்னவென்றால், “எங்களை நம்பி பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள்.

உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது! உங்களுக்காக உழைப்பதுதான் எங்களுடைய கடமை! எங்களுடைய கடமையை நாள்தோறும் செய்வதுதான் நாங்கள் உங்களுக்கு செலுத்தும் நன்றி!” அந்த நன்றி உணர்வுடன் சொல்கிறேன், இனி தமிழ்நாட்டில் எப்போதும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான் என்ற நிலைமையை உருவாக்குவோம். வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் “200-க்கும் அதிகமான தொகுதிகளை நம்முடைய கூட்டணி கைப்பற்றியது” என்ற இலக்கை நோக்கிய நம்முடைய பயணத்தை இன்றிலிருந்து தொடங்குவோம். 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இந்த வெற்றிவிழா கட்டியம் கூறட்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* 40 எம்பிக்கள் என்ன செய்வார்கள்?
‘237 உறுப்பினர்கள் பாஜவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறோம். பாஜ நினைத்தையெல்லாம் செய்ய முடியாது. எங்கள் எம்பிக்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தைச் சுடுவார்கள். ‘வெயிட் அண்ட் சீ’. இதற்கும் ஒரு எடுத்துக்காட்டு சொல்லட்டுமா கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி.க்கள் 9 ஆயிரத்து 695 கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள். 1,949 விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள். 59 தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதைவிட முக்கியமாக அவர்களுடைய செயல்பாடுகளை அங்கீகரிக்கின்ற இன்னொரு விஷயம் இருக்கிறது. ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஏன், பிரதமர் மோடி என்று ஒட்டுமொத்த பா.ஜ.க. அமைச்சர்களும் திமுகவை எதிர்த்துத்தான் நாடாளுமன்றத்தில் அதிகம் பேசியிருந்தார்கள். இதைவிட வேறு என்ன சான்றிதழ் வேண்டும்?’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* 40 எம்பிக்களுக்கும் உதயநிதி நினைவுப்பரிசு
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும்கூட்டணி கட்சிகளை சேர்ந்த 40 எம்பிக்களுக்கும்,அமைச்சர்உதயநிதி ஸ்டாலின், தனித்தனியாக சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கினார்.

* அரசியலமைப்பு புத்தகத்தை பிரதமர் மோடி வணங்கியது: இந்தியா கூட்டணியின் 41வது வெற்றி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றியைத் தலைவர் கலைஞர் நமக்குப் பெற்றுத் தந்தார். அன்றைக்கு இருந்த நிலைமை என்ன? அப்போது ஆளுங்கட்சி அதிமுக அந்தத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை உணர்ந்து, ஜெயலலிதா மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கினார்.

உடனே செய்தியாளர்கள் தலைவர் கலைஞரிடம் அதைபற்றி கேட்டார்கள் அவர் சிரித்துக்கொண்டே “இது எங்களுடைய 41வது வெற்றி” என்று சொன்னார். அதுமட்டுமில்லை, 2004 கருத்துக்கணிப்புகளில், ஒன்றிய அளவில் வாஜ்பாய் தலைமையிலான பாஜதான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று சொன்னார்கள். ஆனால், காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியைப் பிடித்தது.

இப்போதும் அதே மாதிரிதான், பாஜ 400 இடங்கள் வரை கைப்பற்றும் என்று சொன்னார்கள். ஆனால், அதை உடைத்து பாஜவால் தனித்து அரசு அமைக்க முடியாத நிலைமையை உருவாக்கியிருக்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களைப் புரட்சியாளர் அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோமே இதுதான் தலைவர் கலைஞர் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால், இந்தியா கூட்டணியின் 41வது வெற்றி’ என்றார்.

* அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியை அசைக்க முடியாது: செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் பெற்ற இந்த வெற்றி, இந்தியா கூட்டணியின் வெற்றி என்றாலும், இந்தியாவே கொண்டாடுகிற தமிழ்நாட்டின் வெற்றி. இதற்கு முழு முதல் காரணம் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது உண்மை, உழைப்பு, நேர்மை இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. திட்டம் போடுகிறோம், நிதி ஒதுக்குகிறோம் என, அதோடு மட்டும் நின்றிவிடாமல், அந்த திட்டப்பணிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு எப்படி சென்றடைகிறது என அணு அணுவாக ஆய்வு செய்கிறார்.

கடந்த 3 ஆண்டு கால ஆட்சியின் சாதனை காரணமாக தமிழக மக்கள் 40-க்கு 40 தொகுதியிலும் நம்மை வெற்றி பெற செய்துள்ளார்கள்.இப்படி ஆட்சி செய்தால் இன்னும் 25 ஆண்டுக்கு நம் கூட்டணியை, நம் முதல்வரை யாரும் அசைக்க முடியாது. இன்னும் நாம் வரலாறு படைப்போம். இந்த கூட்டணிதான் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு ஏற்ற கூட்டணி. எக்கு ேகாட்டை ேபான்று உள்ளது இந்த கூட்டணி. அவரது கண்ணியம் பாராட்டுக்கு உரியது. அவருக்கு காங்கிரஸ் பேரியக்கம் என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு செல்வப்பெருந்தகை பேசினார்.

* இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்தும் தன்மை மு.க.ஸ்டாலினிடம் உள்ளது: திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: தென்னிந்தியாவில் பாஜ காலூன்ற முடியாத மண் தமிழ்நாடு. தொடர் வெற்றிகளுக்கு முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, யுக்திகள், ஆளுமை, கூட்டணி பலம் ஆகியவைதான் காரணம். அகில இந்தியளவில் இந்தியா கூட்டணி உருவாக ஸ்டாலினின் பங்களிப்பு முக்கியமானது. 40ம் நமதானாலும், நாடு நமதாகவில்லை. அதை செய்யும் ஆற்றல் வாய்ந்த தலைமை ஸ்டாலின்தான்.

சாதி, மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை. அதற்கு சிதம்பரம், தர்மபுரியில் கிடைத்த வெற்றியே சான்று. கோவையில் பெற்ற வெற்றி மதவெறி, மதவாத அரசியல், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு. இந்திய கூட்டணிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அழைத்து வந்தது மு.க.ஸ்டாலின்தான். இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதை வலிமைப்படுத்தும் தன்மை ஸ்டாலினிடம் உள்ளது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

* மோடி இனி வாலாட்ட முடியாது அதிமுகவை மக்கள் புறக்கணித்து விட்டனர்: கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: பிரதமர் மோடி அரசால் கூட்டணி ஆட்சியை நடத்த முடியாது. இந்த ஆட்சி எப்போது கவிழும் என்று தெரியாது. பாஜவுக்கும், அதன் அடிவருடியான அதிமுகவுக்கும் இடமில்லை என சாதித்து காட்டியிருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும். பிரதமர் மோடி இனி வாலாட்ட முடியாது. இந்த வெற்றி மூலம் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

கட்சி முரண்பாடுகளை களைந்து ஒருங்கிணைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அண்ணாமலைக்கு இனி தமிழகத்தில் இடமில்லை என மக்கள் அவரது முகத்தில் ஓங்கி அறைந்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அவர்களை ஏற்கனவே மக்கள் புறக்கணித்துவிட்டனர். தமிழகத்தின் வெற்றி, எதிர்கால இந்தியாவின் வெற்றியாக இருக்கும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் பேசினார்

* தமிழகம்போல மற்ற மாநிலங்களிலும் கூட்டணி அமைந்திருந்தால் பாஜ தோற்கடிக்கப்பட்டிருக்கும்: முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: தமிழக வரலாறை கலைஞரை விடுத்து எழுத முடியாது. அநாகரிகமாக, தரம் தாழ்ந்து பிரதமர் பேசினார். தேர்தலுக்குப் பிறகு திமுக அழிந்துவிடும் என்றார். தேர்தலுக்கு பிறகு யார் டெபாசிட் இழந்திருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். கருத்து திணிப்புகளுக்கு மாறாக அறுதிபெரும்பான்மை பெற முடியாத கட்சியாக பாஜ நிலைகுலைந்துள்ளது.

தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றி அணியை உருவாக்கி இருந்தால், இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும். பாஜ தோற்கடிக்கப்பட்டிருக்கும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தேர்தல் நியாயமாக நடைபெறாது என அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் எதிர்காலத்தில் அதிமுக எந்த இடத்துக்கு செல்வீர்கள் என்பது தெரிந்திருக்கிறது. இந்த அபாயத்தை உணர்ந்து ஒன்றுபட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு முத்தரசன் பேசினார்.

* திருவள்ளுவர் மண்ணில் மதவாத சக்திக்கு இடமில்லை: துரை வைகோ
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேசியதாவது: இந்தியாவின் எடுத்துக்காட்டு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். திராவிட அரசியல் என்றால் சமுகநீதி, சமத்துவம், பெண்கள் உரிமை, மாநில சுயாட்சி ஆகும். ஆக மொத்தத்தில் திராவிட அரசியல் என்றால், சமுதாய முன்னேற்றம்.

பெரியார், அண்ணாவின் திராவிட அரசியலை அரை நூற்றாண்டு காலத்துக்கு கட்டிக் காத்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறோம். திருவள்ளுவர் மண்ணில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர். மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியா கூட்டணிக்கு இமாலய வெற்றி தந்துள்ளனர். இவ்வாறு துரை வைகோ பேசினார்.

The post 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் மேல் தொகுதிகளை கைப்பற்றுவதே நமது இலக்கு: திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை appeared first on Dinakaran.

Tags : 2026 assembly elections ,Chief Minister ,M.K.Stalin ,DMK ,Coimbatore ,2026 assembly elections' ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம்...