×

பாஜ ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்: வைகோ நம்பிக்கை

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே கலாச்சாரம் என்று ஒற்றை இந்துத்துவ தேசியவாதத்தை நிலைநிறுத்த முயன்றவர்களுக்கு 18ஆவது மக்களவைத் தேர்தலில் சரியான அடி விழுந்திருக்கிறது. பாஜவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைந்த இந்தியா கூட்டணி இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. பத்தாண்டு கால மோடி ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்து இருக்கிறார்கள். எனவே, மோடி அவர்கள் பிரதமர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்திருக்கிறார். ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி நடத்துகின்ற தளபதி மு.க.ஸ்டாலின், தலைமையில் அமைந்த இந்தியா கூட்டணி, அவர் பிரகடனம் செய்தவாறு 40 தொகுதிகளிலும் வெற்றி முரசு கொட்டி தமிழ்நாடு திராவிட பூமி என்பதை இந்தத் தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறது. மதிமுக போட்டியிட்ட திருச்சிராப்பள்ளி தொகுதியில் மூன்று லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் உழைத்த தி.மு.கழகத்தின் ஆற்றல் மிக்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னோடிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post பாஜ ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்: வைகோ நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Bahia ,Wiko ,Chennai ,Secretary General ,18th People's Election ,Bajaj ,Waiko Hope ,
× RELATED ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: பாஜ நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்