×

பங்குச்சந்தை கடும் சரிவு முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.31 லட்சம் கோடி இழந்தனர்

மும்பை: பாஜவுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவைச் சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.31 லட்சம் கோடியை இழந்தனர். இந்திய பங்குச்சந்தைகள் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பங்கு முதலீடுகள் மந்தம் அடைந்தன. நேற்று காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கின.  இதில், ஆளும் பாஜ கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

உத்தர பிரதேசம் உட்பட பாஜவின் கோட்டையாகக் கருதப்பட்ட இடங்களிலேயே அந்தக் கட்சி வேட்பாளர்கள் பின்னடைவு அடைந்தனர். அந்த கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை என்ற நிலை உருவானது. இது இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. நேற்று காலை பங்கு வர்த்தகம் 76,285.78 புள்ளிகளுடன் சரிவிலேயே மும்பை பங்குச்சந்தை துவங்கியது. அதிகபட்சமாக 76,300.46 புள்ளிகள் வரை சென்றது. 70,234.43 புள்ளிகள் வரை சரிந்தது.

வர்த்தக இடையில் 6,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால், ரூ.46 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. பின்னர் சற்று உயர்ந்தாலும், வர்த்தக முடிவில் முந்தைய நாள் வர்த்தகத்தை விட 4389.73 புள்ளிகள் அதாவது, 5.74% சரிந்து, 72,079.05 புள்ளிகளானது. இதனால் மும்பை பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு ரூ.4,25,91,511.54 கோடியில் இருந்து ரூ.31,07,806.27 கோடிகள் சரிந்து, ரூ.3,94,83,705.27 கோடிகள் ஆனது. எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு, வங்கி, நிதிச்சேவைகள், உலோகம், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகள் சார்ந்த பங்குகள் அதிக சரிவை சந்தித்தன.

முந்தைய தேர்தல்களில் பங்குச்சந்தை எப்படி?
* இதற்கு முன்பு 2004 மே 13ம் தேதி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றபோது, மும்பை பங்குச்சந்தை குறியீடு 0.77 சதவீதம் உயர்ந்து 5,399.47 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 0.37 சதவீதம் உயர்ந்து 1,717.5 புள்ளிகளாகவும்
இருந்தது.

* 2009, மே 16ம் தேதி காங்கிரஸ் கூட்டணி 2ம் முறையாக வெற்றி பெற்றது. அன்றைய தினம் சென்செக்ஸ் 2.53 சதவீதம் உயர்ந்து 12,173.42 புள்ளிகளாகவும், நிப்டி 17.74 சதவீதமும் உயர்ந்து 4,323.15 புள்ளிகளாகவும் இருந்தது.

* 2014 மே 16ம் தேதி பாஜ கூட்டணி வெற்றி பெற்று மோடி பிரதமரானார். அன்றைய தினம் சென்செக்ஸ் 0.9 சதவீதம் உயர்ந்து 24,121.74 ஆகவும், நிப்டி 1.12% உயர்ந்து 7,203 ஆகவும் இருந்தது.

* 2019, மே 23ம் தேதி பாஜ கூட்டணி வெற்றி பெற்றது. இருப்பினும் அன்றைய தினம் நிப்டி 0.76% சரிந்து 38,811.39 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 0.69% சரிந்து 11,657.05 ஆகவும் இருந்தது. ரூ. 2.87 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது.

* கருத்துக் கணிப்பை வைத்து பங்குச்சந்தையில் முறைகேடு?
நேற்று முன்தினம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதனால், அடுத்ததாக மோடி தலைமையில் நிலையான அரசு உருவாகும் என்ற மாயை உருவானது. இதனால் மும்பை பங்குச்சந்தை 2,500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. ஒரே நாளில் பங்குகள் மதிப்புரூ.13 லட்சம் கோடி உயர்ந்தது. அறுதிப்பெரும்பான்மை வராது என தெரிந்தும், மோசடியாக கருத்துக் கணிப்பு வெளியிட்டு அதன் மூலம் பாஜவினர் பல லட்சம் கோடி லாபம் அடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

The post பங்குச்சந்தை கடும் சரிவு முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.31 லட்சம் கோடி இழந்தனர் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,BJP ,Dinakaran ,
× RELATED பயணிகள் பலி எண்ணிக்கை தினமும்...