×

ரூ.338.79 கோடி மதிப்பில் புளியஞ்சோலையில் 20 மெகாவாட் நீர்மின் நிலையம்

* சுரங்கம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பு, அக்டோபரில் பயன்பாட்டுக்கு வருகிறது

துறையூர்: திருச்சி அருகே புளியஞ்சோலையில் ரூ.338.79 கோடி மதிப்பீட்டில் 20 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாமக்கல்-திருச்சி மாவட்ட கடைக்கோடி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது கொல்லிமலை. இங்குள்ள காட்டாறு மூலம் பெறப்படும் நீர் இரு மாவட்ட பகுதிகளுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,300 அடி உயரத்தில், 280 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் கொல்லிமலை வனப்பகுதி மழைக்காலங்களில் அசாதாரணமான நீர்பிடிப்பு பகுதியாக அமைந்துள்ளது.

குறிப்பாக கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவில் அருகேயுள்ள சிற்றருவியானது ஆகாய கங்கை அருவியாக பெருக்கெடுத்து, கீழ்நோக்கி பாய்ந்து புளியஞ்சோலை பகுதியில் அய்யாறாக உருவெடுத்து இந்த ஆறு மூலம் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தைச் சேர்ந்த உப்பிலியபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி விவசாயத்துக்கு நீராதாரமாக உள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைக்காலங்களில் புளியஞ்சோலைக்கு வரும் நீர் வீணாவதை தடுத்து, 20 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையில் கொல்லிமலை நீர் மின் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு ஆக்க பூர்வமான பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதற்காக சுமார் 5 எக்டேர் நிலப்பரப்பில் வனப்பகுதியில் ஆய்வு பணிகள் நடைபெற்று நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.338.79 கோடியில் அமைக்கப்பட்டு வரும் 20 மெகாவாட் நீர் மின் திட்டப் பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுற்றதும் ஆண்டுக்கு 712 லட்சம் யூனிட் மின்சாரம் கிடைக்கும். கொல்லிமலையில் உள்ள அரப்பளீஸ்வரர் கோயில் பகுதியில் பல்வேறு இடங்களிலிருந்து வரும் நீரூற்று அய்யாறாக ஒன்றிணைந்து திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் மலையடிவாரத்தில் அருவியாக விழுகிறது.

இந்த நீரைக் கொண்டு நீர் மின் திட்டத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்உரிய கள ஆய்வுகளை மேற்கொண்டு, ரூ.338.79 கோடி மதிப்பில் செயல்படுத்தத் திட்டமிட்டது. இத்திட்டத்துக்கு 21.12.2018-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்துக்கான நீரை சேகரிக்க கொல்லிமலையில் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கலிங்குகள் கட்டப்பட்டு சேகரிக்கப்படும் நீர் சுரங்கம் மூலமாக செல்லிப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இத்திட்டத்துக்கான நீரை சேகரிக்க கொல்லிமலையில் உள்ள அசக்காடுபட்டி, காடம்பள்ளம், தெளியங்காடு, கோவிலூர், இருங்குளிப்பட்டி ஆகிய இடங்களில் நீரை சேகரிக்க சிறு கலிங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.கொல்லிமலையில் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கலிங்குகளிலிருந்து சேகரிக்கப்படும் நீர் சுரங்கம் மூலமாக செல்லிப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கிருந்து கீழ்நோக்கி ஏறத்தாழ 2 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்படும் குழாயில் விநாடிக்கு 3,600 லிட்டர் நீரை வேகமாக கொல்லிமலையின் தெற்கு பகுதியான புளியஞ்சோலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் மின் நிலையத்துக்கு அனுப்பி, அங்குள்ள டர்பனை சுற்ற வைத்து, அதிலிருந்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும். இத்திட்டத்தில் மிகக்குறைந்த நீரைக் கொண்டு, 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த மின் நிலையத்திலிருந்து ஆண்டுக்கு ஏறத்தாழ 6 முதல்8 மாதங்களுக்கு மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மின்சாரம் மின்பற்றாக்குறையைப் போக்க பயன்படுத்தப்படும். டர்பனில் சுற்றி கீழே விழும் நீரினை அய்யாற்றிலேயே விடப்படும். தற்பொழுது சுரங்கம் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையிலும், மின் மாற்றி, குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இத்திட்டப் பணிகள் தற்போது ஏறத்தாழ 70 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் விரைவாக பணியாற்றி வருகின்றனர்.

The post ரூ.338.79 கோடி மதிப்பில் புளியஞ்சோலையில் 20 மெகாவாட் நீர்மின் நிலையம் appeared first on Dinakaran.

Tags : Puliancholai ,Kadakodi ,Namakkal-Tiruchi district ,Dinakaran ,
× RELATED கொல்லிமலைக்கு செல்ல தற்காலிக தடை