×

மஞ்சூர் அருகே வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்த காட்டு மாடு

மஞ்சூர் : மஞ்சூர் அருகே காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்த காட்டு மாடால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் மிகுதியாக உள்ளது. குறிப்பாக கரடி மற்றும் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் காட்டு மாடு ஒன்று உலா வந்தது. தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட காட்டு மாடு திடிரென நஞ்சூண்டராஜ் என்பவரது வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து வீட்டு வாசலில் நின்றது.

தொடர்ந்து அங்கிருந்து வெளியேற வழி தெரியாத நிலையில் வீட்டு வளாகத்தில் அங்குமிங்குமாக சுற்றியது. இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் நஞ்சூண்டராஜின் வீட்டருகே சென்று காம்பவுண்டுகேட்டின் கதவை திறந்து விட்டார்கள். இதை தொடர்ந்து காட்டு மாடு அவ்வழியாக வெளியேறி மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து வீட்டு வளாகத்திற்குள் புகுந்த காட்டு மாடால் மட்டகண்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன் குந்தா பழைய பெட்ரோல் பங்க் என்ற இடம் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் சிலர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர்.

அப்போது தேயிலை ேதாட்டத்திற்குள் 3 காட்டு மாடுகள் புகுந்தது. அதில் ஒன்று தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அருகே சென்றுள்ளது. இதைக்கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து உடனடியாக தேயிலை தோட்டத்தை விட்டு வெளியேறினர். காட்டு மாடுகள் குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்ட பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலவி வருவதால் பொதுமக்களும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் பீதி அடைந்து வருகின்றனர்.

The post மஞ்சூர் அருகே வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்த காட்டு மாடு appeared first on Dinakaran.

Tags : Manjoor ,Nilgiri ,Dinakaran ,
× RELATED நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல்...