×

காற்றின் வேகம் அதிகரிப்பால் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு : தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காற்றாலை மின்உற்பத்தி 4111 மெகாவாட்டை எட்டியது!!

சென்னை: நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மே முதல் அக்டோபர் வரை காற்றாலை சீசன். இந்த காலக்கட்டத்தில், காற்றாலைகளில் இருந்து 5,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கும். தமிழ்நாட்டில் உள்ள 13,000 காற்றாலைகளில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் 10,000 காற்றாலைகள் உள்ளன. நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்ததால் மின்உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டு 100 மெகாவாட்டுக்கும் குறைவாகவே மின் உற்பத்தி நடந்து வந்தது. தொடர் மழை காரணமாக மின்உற்பத்தி நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. தென் மேற்கு பருவக்காற்று தற்போது பலமாக வீசி வருவதால் காற்றாலை மின்உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காற்றாலை மின்உற்பத்தி 4111 மெகாவாட்டை எட்டியுள்ளது.

இதனிடையே கடந்த மார்ச் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் வீடுகளில் ‘ஏசி’ சாதன பயன்பாடு மற்றும் விவசாய மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மின்நுகர்வு தொடர்ந்து அதிகரித்து, இம்மாதம் 2ம் தேதி 20,830 மெகா வாட்டாக புதிய உச்சத்தை எட்டியது.அதிகபட்ச மின் தேவை பதிவானபோதும் சீரான மின் விநியோகத்தை தமிழக மின் வாரியம் உறுதி செய்தது. அதிகரிக்கும் மின் தேவையால் மின்சார பற்றாக்குறை ஏற்படுமோ என பலர் அச்சம் தெரிவித்தனர். மேலும் தேவையை பூர்த்தி செய்ய மின்சார சந்தையில் அதிக கொள்முதல் செய்யப்படுவதால் செலவு அதிகரித்தது. இதனிடையே தற்போது, காற்றாலை சீசன்தொடங்கி உள்ளதால், வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவது படிப்படியாக நிறுத்தப்படும். மேலும், தென்மாவட்டங்களில் கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளதால் தினசரி மின்தேவை குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், தினசரி மின்தேவையை மின்வாரியம் எளிதாக பூர்த்தி செய்யும். இனி வரும் காலங்களில் காற்றாலைகளுக்கு சாதகமான காற்று வீசும் என்பதால் காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காற்றின் வேகம் அதிகரிப்பால் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு : தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காற்றாலை மின்உற்பத்தி 4111 மெகாவாட்டை எட்டியது!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Nellai district ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...