×

தடைக்காலம் முடிந்ததும் கடலுக்கு செல்ல தயாராக உள்ளதா என விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

*பதிவுச்சான்றுகளை சரிபார்த்தனர்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 750 விசைப்படகுகளையும் 11பேர் குழு கொண்ட மீன்வளத் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின்படி ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் தடைக்காலங்களில் தங்களின் படகுகளில் பழுதுகள் இருந்தால் சரிசெய்து வர்ணம் அடித்து தடைகாலத்திற்கு பின் மீன்பிடிக்கச் செல்வதற்கு தயாராக வைத்திருப்பார்கள்.

அதேபோல் மீன்பிடி வலைகளிலும் ஏதேனும் கிழிந்திருந்தால் அதனையும் சரிசெய்யும் பணியில் ஈடுபடுவது வழக்கம். மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கணக்கில் கொண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்களுக்கு ஆழ்கடல் சென்று விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவகிராமங்களில் உள்ள 750 விசைப்படகுகள் மீன்பிடிக்க ஆழ்கடல் செல்லவில்லை. வழக்கம்போல் இவ்வாண்டும் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கம் செய்து வருகின்றனர்.

தடைகாலத்தின்போது 75 ஆயிரம் மீனவர்கள் மற்றும் அதை சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்படும். நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வர்த்தக இழப்பு ஏற்படும். விசைப்படகுகளை துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.இந்நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தடைகாலம் முடித்தவுடன் இயக்கப்படவுள்ள விசைப்படகுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.

இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத 750 விசைப்படகுகளை 24ம் தேதி ஆய்வு செய்யவுள்ளதாக மீன்வளத்துறை சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பட்டினச்சேரி, நாகூர், நாகப்பட்டினம் துறைமுகம், வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் நிறுத்தி வைத்துள்ள விசைப்படகுகளை நேற்று காலை ஆய்வு செய்ய தொடங்கினர்.

இதற்காக நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் இளம்பருதி தலைமையில் உதவி இயக்குனர் ஜெயராஜ் முன்னிலையில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த 11 குழுவினர் ஆய்வு செய்ய தொடங்கினர். அப்போது படகு உரிமையாளர்களின் பெயர், படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீட்டு உரிமம், வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம், படகு கடலுக்கு செல்ல தகுதியானதா உள்ளிட்டவைகளை மீன்வளத்துறையிடம் ஆய்வு செய்தனர். மேலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைதொடர்பு கருவிகள், கடல் பயணத்தின் போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கருவிகள் ஆகியவை சரியாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாரிகள் தரப்பில், விசைப்படகுகளில் பதிவு எண்கள் தெளிவாக தெரியும்படி எழுதி வைக்க வேண்டும், ஆய்வில் காண்பிக்கப்படாத விசைப்படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்படும். படகுக்கான பதிவு சான்றும் ரத்து செய்யப்படும், ரத்து செய்யப்பட்ட படகை மீண்டும் ஆய்வு செய்யக்கோரி படகு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தால் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படாது என ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆறு காட்டுறையில் சுமார் 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருவதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. விசைப்படகு மீனவர்கள் பாதுகாப்பு ஆறுகாட்டுதுறையில் துறைமுகம் கட்டுமான பணி நடைபெறும் வளாகத்தில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் படகுகளை பழுதுபார்க்கும் பணி மற்றும் படகுகளுக்கு வண்ணம் பூசும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆறுகாட்டு துறையில் உள்ள விசைப்படகுகளை மீன்துறையினர் ஆய்வு செய்தனர். விசைப்படகு தரம் மற்றும் விசைப்படகின் உரிமம், டீசல் மானியம் குறித்து விவரம் போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

The post தடைக்காலம் முடிந்ததும் கடலுக்கு செல்ல தயாராக உள்ளதா என விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Fisheries Department ,Dinakaran ,
× RELATED கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம்