×

சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருகலைப்பு கோடம்பாக்கம் கேடன்ஸ் மருத்துவமனைக்கு சீல்: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அதிரடி

சென்னை: தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடம்பாக்கம் கேடன்ஸ் மருத்துவமனையில் சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருகலைப்பு செய்யப்படுவதாக, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் மற்றும் டாக்டர் களத்தூர் ரவிகிருஷ்ணா ஆகியோரிடமிருந்து கடந்த ஜனவரி 6ம் தேதி பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மாநில அமலாக்க அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் ஆகியோரின் ஆணைப்படி, இணை இயக்குநர் (சட்டம்) தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழுவினர், கடந்த 2ம் தேதி மேற்கொண்ட நேரடி ஆய்வில் கோடம்பாக்கம் கேடன்ஸ் மருத்துவமனையில் ஸ்கேன் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும், டாக்டர் முரளி உரிய அனுமதியின்றி ஸ்கேன் செய்ததும், மாதாந்திர அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பிக்காமல் இருந்ததும், மேலும் கர்ப்பிணி பெண்களிடம் பெறக்கூடிய பார்ம்-எப்-ஐ முறையாக பராமரிக்கப்படாததும் கண்டறியப்பட்டது. மேற்காணும் குறைபாடுகளைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மாவட்ட அமலாக்க அலுவலர் உரிய விளக்கம் கேட்டார். கடந்த 17ம் தேதி கேடன்ஸ் மருத்துவமனையின் விளக்க கடிதம் குறைபாடுகளுக்கு தொடர்பில்லாமலும் திருப்தியின்றியும் அமைந்தது.

அதை தொடர்ந்து விசாரணைக் குழுவானது நேற்று முன்தினம் கேடன்ஸ் மருத்துவமனையில் மீண்டும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் மருத்துவமனையில் நிர்வாகம் மேற்கொள்ள முறையான பணியாளர்கள் இல்லை என்பதும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம்- 1997 சட்டத்தின் கீழ், உரிய அனுமதி பெறாமல் மருத்துவர்கள் பணியாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உரிய அனுமயின்றி கருக்கலைப்பு செய்வதும் மகளிர் நலன் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைகள் முறையான மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் செய்யப்பட்டதும், அவசர காலங்களில் மயக்கவியல் நிபுணர், பொது நல மருத்துவர் மற்றும் அவசரகால மருத்துவர்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது. மேற்காணும் மருத்துவமனை மனநல மருத்துவம் அளிக்க மாநில மனநல அலுவலரிடம் முறையான அனுமதி பெறாமல் மனநல சிகிச்சை மேற்கொண்டது கண்டறியப்பட்டது. மேலும், மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்தும்) சட்டம், 1997 விதி 5(1)-ன் கீழ் பொது மக்களின் நலன் கருதி கேடன்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை தற்காலிகமாக நீக்கம் செய்து ஆணையிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் இந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருகலைப்பு கோடம்பாக்கம் கேடன்ஸ் மருத்துவமனைக்கு சீல்: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Cadence Hospital ,Codambakkam ,Medicine ,Rural Welfare Action ,Chennai ,Tamil Nadu Medical and Rural Welfare ,Tamil Nadu Public Health and Epidemiology Department ,Kodambakkam Cadence Hospital ,Dr. ,Kalathur ,Codambakkam Cadence Hospital ,Medicine and Rural Welfare Action ,Dinakaran ,
× RELATED சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில்...