×

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கும். ஜூன் முதல் வாரத்தில் அதாவது, 1 முதல் 5ம் தேதிகளுக்குள் பள்ளிகள் திறப்பும் இருக்கும்.இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில், நாடாளுமன்ற தேர்தல் முடிவு ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளதால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், அதனை கருத்தில் கொண்டும் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும். ஆனால் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்த காரணத்தினால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. கடந்த 2 வாரங்களாக வெப்பஅளவு குறைவாகவே பதிவாகி வருகிறது. மேலும் வரக்கூடிய நாட்களிலும் வெப்பம் குறைந்தே காணப்படும் என்று கருதி, கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? என்ற அறிவிப்பை இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறை முன்கூட்டியே வெளியிட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2024-25ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (ஜூன்) 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். எனவே குறிப்பிட்ட நாளில், பள்ளிகளை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Department ,Chennai ,
× RELATED பணியிடங்களில் பாலியல் தொல்லை...