×

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு; கோவிலாறு அணையை தூர்வார வேண்டும்: வத்திராயிருப்பு விவசாயிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு: கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ள கோவிலாறு அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது பிளவக்கல் நீர்த்தேக்கம். இந்த பகுதியில் கடந்த 1971ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் பிளவக்கல் நீர்த்தேக்கம் என அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் ஒரே அணையாக கட்ட இருந்த நிலையில் பின்பு பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணை என 2 அணைகளாக கட்டப்பட்டது. பிளவக்கல் பெரியாறு அணை 47 அடி முழு கொள்ளளவும், கோவிலாறு அணை 42 அடி முழுகொள்ளவும் கொண்டது. இந்த இரு அணைகளையும் நம்பி சுற்றுவட்டார பகுதிகளில் பெரியகுளம், விராகசமுத்திரம், பூரிபாறைகுளம், எஸ்.கொடிக்குளம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது பிளவக்கல் பெரியாறு அணையில் 25 அடி நீர்மட்டமும், கோவிலாறு அணையில் 30 அடி நீர்மட்டமும் உள்ளது. பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் ஆகியும் ஒரு முறை கூட தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கோவிலாறு அணைப்பகுதியில் கருவேல மரங்கள் அதிகமாக காட்சியளிக்கிறது. இதனால் அணையின் பரப்பளவு குறைந்து காணப்படுகிறது. மேலும் அணையில் நீரை தேக்கி வைத்தாலும் அதை அங்குள்ள கருவேலமரங்கள் உறிஞ்சி விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே நீர் வற்றிய பின்பு பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ‘‘பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் மூலம் 40க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த அணைக்கு நல்ல நீர்வரத்து உள்ளது. ஆனால் தண்ணீரில் பெரும் பகுதியை கருவேல மரங்கள் உறிஞ்சி விடுகின்றன. இதனால் அணையில் தண்ணீர் விறுவிறுவென வற்றி விடுகிறது. இதன்மூலம் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே அணையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை உடனே வேரோடு பிடுங்கி எறிய வேணடும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு; கோவிலாறு அணையை தூர்வார வேண்டும்: வத்திராயிருப்பு விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kovilarau dam ,Vathirayiru ,Plavakkal Reservoir ,Western Ghats ,Vathirairipu ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED விலங்குகள் நடமாட்டம் கோவிலாறு...