×

நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு கரும்பு, வாழை பயிரை டிராக்டர் மூலம் ஏர்ஓட்டி அழித்த மர்ம ஆசாமிகள்

*சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே கரும்பு, வாழை பயிரை டிராக்டர் மூலம் ஏர் ஓட்டி மர்ம நபர்கள் அழித்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் முதலியார் அறக்கட்டளைக்கு சொந்தமான 40 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு 15 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலத்தை சரியான முறையில் பராமரிக்க முடியாத காரணத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டு பயிர் செய்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா தேவநாதன் என்பவர் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார்.

இதில் 5 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரும், 5 ஏக்கரில் கரும்பு பயிர் செய்துள்ளார். கரும்பு பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளது. இதில் ஒரு சில உறுப்பினர்கள் தங்களால் பராமரிக்க முடியவில்லை எனக் கூறி இடத்தை விற்க முயன்றனர். அப்போது இந்த இடம் விற்க, வாங்க முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து அந்த உறுப்பினரில் சிலர் வழக்கு தொடுத்தனர். இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில அறக்கட்டளையில் உறுப்பினராக உள்ள ஒரு சிலர் பத்து ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முயன்றனர். பத்திரப்பதிவு செய்ய முடியாததால் தனிநபருக்கு அந்த இடத்தை பவர் செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா தேவநாதன் அறக்கட்டளைக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்து வரும் நிலத்தில் நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சிலர் கரும்பு, வாழை பயிர்களை டிராக்டர்கள் மூலம் ஏர் ஓட்டி விவசாய பயிர்களை முற்றிலுமாக அழித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் – பண்ருட்டி சாலையில் வெள்ளகேட் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி. பழனி, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பலராமன், நெல்லிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன், ரெட்டி சாவடி வருவாய் ஆய்வாளர் மலர் ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாய பயிர்களை அழித்து நாசமாக்கிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அழிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்து டிஎஸ்பி பழனியிடம் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட டிஎஸ்பி உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படும் என உறுதி அளித்ததின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் டிஎஸ்பி மற்றும் போலீசார் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அழிக்கப்பட்ட வாழை, கருப்பு பயிர்களை பார்வையிட்டனர். இச்சம்பவத்தால் கடலூர் -பண்ருட்டி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு கரும்பு, வாழை பயிரை டிராக்டர் மூலம் ஏர்ஓட்டி அழித்த மர்ம ஆசாமிகள் appeared first on Dinakaran.

Tags : Nellikuppam ,Dinakaran ,
× RELATED வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை