×

தமிழ்நாட்டில் சீசன் தொடங்கியது முதல் காற்றாலை மூலம் தினமும் 2000 மெகாவாட் மின் உற்பத்தி: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் சீசன் துவங்கியது முதல் தினமும் 2,000 மெகா வாட்டிற்கு மேல் காற்றாலை மின்சாரம் கிடைப்பதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். இந்த காலக்கட்டத்தில், காற்றாலைகளில் இருந்து தினமும், 2,500 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கும். கடந்த மார்ச் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் வீடுகளில் ‘ஏசி’ சாதன பயன்பாடு மற்றும் விவசாய மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மின்நுகர்வு தொடர்ந்து அதிகரித்து, இம்மாதம் 2ம் தேதி 20,830 மெகா வாட்டாக புதிய உச்சத்தை எட்டியது.

அதிகபட்ச மின் தேவை பதிவானபோதும் சீரான மின் விநியோகத்தை தமிழக மின் வாரியம் உறுதி செய்தது. அதிகரிக்கும் மின் தேவையால் மின்சார பற்றாக்குறை ஏற்படுமோ என பலர் அச்சம் தெரிவித்தனர். மேலும் தேவையை பூர்த்தி செய்ய மின்சார சந்தையில் அதிக கொள்முதல் செய்யப்படுவதால் செலவு அதிகரித்துள்ளது. தற்போது, காற்றாலை சீசன் துவங்கியுள்ள நிலையில், காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 2,000 மெகா வாட் மின்சாரம் கிடைப்பதாக மின் வாரிய அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் 10,600 மெகா வாட் திறனில் காற்றாலைகளை நிறுவியுள்ளன. சீசன் காலத்தில் காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைக்கும். ஒரு யூனிட் உற்பத்தி செலவும் ரூ.3.10 தான். இது, அனல் மின்சாரம், மின் கொள்முதல் போன்ற செலவுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு. தற்போது, காற்றாலை சீசன்தொடங்கி உள்ளதால் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதனால், வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவது படிப்படியாக நிறுத்தப்படும். மேலும், தென்மாவட்டங்களில் கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளதால் தினசரி மின்தேவை குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், தினசரி மின்தேவையை மின்வாரியம் எளிதாக பூர்த்தி செய்யும். இனி வரும் காலங்களில் காற்றாலைகளுக்கு சாதகமான காற்று வீசும் என்பதால் காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக மேலும் அதிகரிக்கும். காற்றாலைகளில் அதிக அளவாக கடந்த 2023 செப்டம்பர் 10ம் தேதி 5,838 மெகா வாட் கிடைத்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தமிழ்நாட்டில் சீசன் தொடங்கியது முதல் காற்றாலை மூலம் தினமும் 2000 மெகாவாட் மின் உற்பத்தி: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Electricity Board ,Tamilnadu ,
× RELATED ரத்து செய்யப்பட்ட இணைப்புக்கு...