×

மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி முயற்சி பிரிவினைவாத பேச்சு அடிப்படையில் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி முயற்சிக்கிறார். பிரிவினைவாத பேச்சின் அடிப்படையில் எங்கும் பிரசாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது என்றும் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அளித்த பேட்டி: தாலியை பற்றி பேசிய மோடியை கண்டித்து தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்படும். பிரிவினைவாத பேச்சுகளை பிரதமர் மோடி கைவிட வேண்டும்.

இல்லாவிட்டால் அவரது கொடும்பாவியை தினம் தினம் எரித்து போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறேன். மதரீதியான பிளவை ஏற்படுத்துவதற்கும், கலவரத்தை ஏற்படுத்தவும் மோடி முயல்வது அப்பட்டமாக இந்திய மக்களுக்கு தெரியவந்துள்ளது. அவரது இந்த பேச்சின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியை எங்கும் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது. யாராவது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்தால், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை மீறினால் எப்படி தடை விதிக்கிறார்களோ அதேபோன்று மோடிக்கு தடை விதிக்க வேண்டும்.

இந்துக்கள் எல்லாம் இவரை நம்புவது போலவும், இந்துக்கள் எல்லாம் இவர் பின்னாடி இருப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகிறார். ஒரு போதும் இந்துக்கள் தேச விரோத சக்திகளை அனுமதிக்க மாட்டார்கள். இந்த நாடு பன்முகத் தன்மை கொண்டது. மோடி இப்படி பிரிவினை வாதத்தையும், மத வாதத்தையும் தூண்டி விடும் செயலில் ஈடுபட்டிருப்பதால் இந்திய தேர்தல் ஆணையம் அவரை பிரசாரம் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது.

முதல்கட்ட தேர்தல் முடிந்து இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாஜ வெற்றி பெறாது என்பதை கருதி மோடி விஷமத்தனத்தை இந்தியா முழுவதும் விதைத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஹசீனா சையத், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் பொறுப்பேற்றார்.

மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், ஆனந்த் சீனிவாசன், பொருளாளர் ரூபி மனோகரன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, இலக்கிய பிரிவு தலைவர் புத்தன், மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு மற்றும் நிர்வாகிகள் நிசார், சூளை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி முயற்சி பிரிவினைவாத பேச்சு அடிப்படையில் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Selvaperundha ,Election Commission ,Chennai ,Selvaperundagai ,Election Commission of India ,Tamil Nadu Congress ,President ,Selvaperunthakai ,Satyamurthy ,Bhavan ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...