×

உலகிலேயே இதுவரை இல்லாத அளவு 2024 மக்களவை தேர்தலில் ரூ.1.35 லட்சம் கோடி செலவு: ஆய்வில் கணிப்பு

கொல்கத்தா: உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு மக்களவை தேர்தலில் ரூ.1.35 லட்சம் கோடி வரை செலவிடப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 35 ஆண்டாக தேர்தல் செலவினங்களை கண்காணித்து வரும் தனியார் லாபநோக்கமற்ற நிறுவனமான சென்டர் பார் ஸ்டடிஸ் (சிஎம்எஸ்) நிறுவனம், தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தல் செலவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு மக்களவை தேர்தலில் ஒட்டுமொத்தமாக ரூ.1.35 லட்சம் கோடி வரை செலவிடப்படும் என எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. இது, தேர்தல் தேதி அறிவிப்பதற்காக சுமார் 4 மாதத்திற்கு முன்பிருந்தே செய்யப்பட்ட செலவுகளும் உள்ளடக்கியது. மேலும், வேட்பாளர்கள் பிரசார செலவு, அரசியல் பேரணிகள், போக்குவரத்து, பாதுகாப்பு படையினரை பணியமர்த்துதல், கட்சிகளுக்கு தரப்படும் நன்கொடை, தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் விழிப்புணர்வு என ஒட்டுமொத்த செலவுகளும் கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து சிஎம்எஸ் தலைவர் பாஸ்கரராவ் கூறுகையில், ‘‘முதலில் ரூ.1.2 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிட்டிருந்தோம். தற்போது தேர்தல் பத்திர விவரங்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து மதிப்பீட்டை திருத்தி ரூ.1.35 லட்சம் கோடியாக நிர்ணயித்துள்ளோம். இதில் தேர்தல் ஆணைய செலவுகள் 10 முதல் 15 சதவீதம் இருக்கும். கடந்த 2019 மக்களவை தேர்தலில் மொத்த செலவு ரூ.60 ஆயிரம் கோடி. இதை விட 2 மடங்கு அதிகமாக இம்முறை செலவு செய்யப்படும்’’ என்றார். மக்களவை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் எண்ணிக்கை 96.6 கோடி. மொத்த செலவும் சேர்த்து, தேர்தலுக்காக ஒரு நபருக்கு ரூ.1,400 செலவிடப்படுகிறது. கடந்த 2020ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரூ.1.2 லட்சம் கோடி செலவிடப்பட்டது. இதையும் மிஞ்சி உலகிலேயே அதிக செலவுமிக்க தேர்தலாக 2024 மக்களவை தேர்தல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

The post உலகிலேயே இதுவரை இல்லாத அளவு 2024 மக்களவை தேர்தலில் ரூ.1.35 லட்சம் கோடி செலவு: ஆய்வில் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : 2024 ,Lok Sabha Elections ,Kolkata ,Lok Sabha ,Center Bar Studies ,CMS ,
× RELATED 2024 மக்களவைத் தேர்தல்.. அரசின்...