வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கியதாக போராட்டம் ஓட்டு இல்லையாம்… ஆனா விரல்ல மை இருக்கு… கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் காமெடி கலாட்டா

கோவை: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கியதாக போராட்டம் நடத்திய அண்ணாமலை ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் விரலில் ஓட்டு போட்டதற்கான மை வைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாஜவினர் காமெடி போராட்டம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் பலரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக வாக்காளர்கள் குற்றச்சாட்டி இருந்தனர்.

கோவை, தென் சென்னை உள்ளிட்ட தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் தங்களது தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் முறையாக வாக்காளர் பட்டியலை சரி பார்க்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தனர். ஓரு கட்சியின் மாநில தலைவர்களாக பதவி வகித்தவர்களுக்கு தேர்தல் நாள் அன்றுதான் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தெரியவந்ததா? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதை கண்டித்து கோவை வட்டாட்சியர் அலுவலகம் அருகே “பப்ளிக் பார் அண்ணாமலை’’ அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பாஜவை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘நான் உயிரோடுதான் இருக்கிறேன். எனக்கு வாக்கு ஏன் இல்லை. எனக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. அதன் மதிப்பு என்ன?. என் வாக்கு என் உரிமை. தெப்பக்குளம் ஓட்டுக்கள் எங்கே’ என கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையர்பாளையம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டே நீக்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும், தங்களின் வாக்கு மறுக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மனு அளிக்க உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் பாஜ கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோரின் விரல்களில் வாக்கு செலுத்தியபோது வைக்கப்பட்ட மை இருந்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு இல்லை என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் நடத்திய காமெடி போராட்டத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ‘அண்ணாமலை தினமும் ஒரு பொய் சொல்வார், பொய்களின் மன்னன்’ என்று எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், தற்போது காமெடி போராட்டம் மூலம் அண்ணாமலை சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

The post வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கியதாக போராட்டம் ஓட்டு இல்லையாம்… ஆனா விரல்ல மை இருக்கு… கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் காமெடி கலாட்டா appeared first on Dinakaran.

Related Stories: